Saturday, 10 July 2021

டான்ஶ்ரீ முஹிடின் யாசின் முன்னாள் பிரதமரே- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் பெரும்பான்மையாக இருந்த அம்னோ தனது ஆதரவை மீட்டுக் கொண்ட நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் அரசு இனியும் சட்டப்பூர்வமானது அல்ல. எனவே அதன் தலைவரான டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மலேசிய மக்கள் சக்தி கட்சியை பொறுத்தவரை இனி முன்னாள் பிரதமரே என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

பெரும்பான்மை இல்லாத ஓர் அரசு ஆட்சியில் நீடிக்க முடியாது என்பதை அரசியலமைப்பு சட்டம் கூறுகின்ற நிலையில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தை கூட்டி தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து இன்னும் நாங்கள் தான் அரசாங்கம் என்று கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது.

ஜனநாயகம் இல்லாத ஓர் ஆட்சியில் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்  நிலைதன்மையற்ற அரசியல் சூழலால் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் பொருளாதார பின்னடைவை நோக்கி நமது நாடு சென்றுக்  கொண்டிருக்கிறது.

இடைக்கால அரசு தேவையில்லை

அதோடு, பெரிக்காத்தான் நேஷனல் அரசு கலைக்கப்பட்டால் பொதுத் தேர்தல் நடத்தப்படுவது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக அமையும். 

ஆனால், நாட்டின் இன்றைய சூழலில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவது சாத்தியம் இல்லாத நிலையில் இடைக்கால அரசு நியமனம் செய்யப்படுவதை காட்டிலும் நாட்டின் தலைமைச் செயலாளரையே நாட்டின் தலைவராக மாமன்னர் நியமிக்க வேண்டும். 

3 மாத காலகட்டத்தில் நாட்டின் தலைமைச் செயலாளர் சிறந்த முறையில் செயல்பட்டு கோவிட்-19 பாதிப்புகளை 80 விழுக்காடு கட்டுப்படுத்திய பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னர் மக்களின் அங்கீகாரத்துடன் புதிய அரசாங்கம் ஆட்சியில் அமர வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

 

No comments:

Post a Comment