Tuesday, 9 March 2021

முறைகேடுகள் ஏதுமின்றி சேவையாற்றுங்கள்- இந்திய சமூகத் தலைவர்களுக்கு கணபதிராவ் அறிவுறுத்து

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு மாநில அரசு வழிவகுத்து வருகிறது என்பதற்கு அடையாளமாக 50 பேர் இந்திய சமூகத் தலைவர்களாக (Ketua Komuniti India) நியமனம் செய்யப்பட்டதற்கான நியமனக் கடிதங்களை இன்று பெற்றுக் கொண்டனர்.

மாநில அரசு செயலகத்திலுள்ள ஜுப்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக சமூகத் தலைவர்களை நியமனம் செய்துள்ள  முதல் மாநிலமாக சிலாங்கூர்  திகழ்கிறது. பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் இத்தகைய நியமனங்கள் செய்யப்படுகின்றன.

இந்திய சமூகத் தலைவர்களின் வாயிலாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் சமூகநலப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார் அவர்.

அதோடு, இந்திய சமூகத் தலைவர்களுக்காக ஒதுக்கப்படும் மானியங்களை முறையாக செலவழிக்க வேண்டும்  எனவும் எவ்வித முறைகேடுகளும் நிகழா வண்ணம் தங்களின் நடவடிக்கைகள் திகழ்ந்திட வேண்டும் என்று இந்திய சமூகத் தலைவர்களை கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளின் மூலம் 62 பேர் இந்திய சமூகத் தலைவர்களாக நியமனம் செய்யப்படவிருக்கின்றனர். அதன் முதற்கட்டமாக இன்று 50 பேர் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜும் உடன் கலந்து கொண்டார்.


No comments:

Post a Comment