எழுத்து: ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மலேசிய அரசியல் தடத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகும். மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களான துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அமைச்சர்களாகவும் தங்களது சேவையை வழங்கியவர்கள்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் துன் சம்பந்தனுக்கு பிறகு 1974ஆம் ஆண்டு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது முதல் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தல் வரை நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெருமையை தக்கவைத்துக் கொண்டார்.
மஇகாவின் தேசியத் தலைவராக 1979ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் 2010ஆம் ஆண்டு கட்சியின் துணைத் தலைவராக இருந்த டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலிடம் அப்பதவியை ஒப்படைக்கும் வரை மஇகாவின் தேசியத் தலைவராக பதவி வகித்த பெருமையும் துன் சாமிவேலுவுக்கு உண்டு.
'சிங்கத்தின் கர்ஜனையாக' துன் சாமிவேலுவின் கணீர் குரல் இந்திய சமுதாயத்தில் மட்டுமின்றி அமைச்சரவையிலும் எதிரொலித்தது; அவரது செயல்பாடுகளும் அவ்வாறே அமைந்திருந்தன.
துன் மகாதீர் நாட்டின் 4ஆவது பிரதமராக பதவி வகித்தபோது அவரது அமைச்சரவையில் நீண்ட காலமாக பதவி வகித்த துன் சாமிவேலு, இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக குரல் கொடுக்க தயங்காதவராகவே திகழ்ந்தார்.
துன் மகாதீர் அமைச்சரவையில் அவர் எடுப்பதுதான் முடிவு, அதை மீறி எதையும் செய்ய முடியாது என்ற நிதர்சனமான உண்மை நாட்டின் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் துன் மகாதீர் 7ஆவது பிரதமராக பதவி வகித்தபோது துன் சாமிவேலுவை தூற்றிய அன்றைய எதிர்க்கட்சியாக திகழ்ந்த, 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கப் பிரதிநிதியாக திகழ்ந்த அரசியல்வாதிகள் மட்டுமின்றி மக்களும் உணர்ந்து கொண்டனர்.
அத்தகைய சர்வதிகார போக்குடைய துன் மகாதீருடன் அமைச்சராக பணியாற்றி அதே சமயம் இந்திய சமுதாயத்தின் தேவைகளான தமிழ்ப்பள்ளிக்கூடம், வீட்டுடைமை, பொருளாதார மேம்பாடு, சமூகநலன் என பல நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்ட துன் சாமிவேலுவை 12ஆவது பொதுத் தேர்தலில் தோற்கடிக்கச் செய்தது சுங்கை சிப்புட் மக்களுக்கும் இந்திய சமூகத்திற்கும் ஒரு பேரிழப்புதான்.
துன் சாமிவேலு மஇகாவின் தலைவராக பதவி காலத்தில் தோல்வியின் அடையாளச் சின்னமாக கருதப்படுவது மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் மட்டுமே. ஆனால் அதையும் தாண்டி டேஃப் கல்லூரி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், எம்ஐஇடி கல்வி கடனுதவி திட்டம், கேபிஜே கூட்டுறவு கழகம் போன்ற வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்துள்ளதை யாரும் மறக்க முடியாது.
'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி நம் வழக்கத்தில் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்தான் துன் சாமிவேலு.
தான் பதவியில் இருந்தபோது தூற்றப்பட்டவர்களாலேயே 'இவர் பதவியில் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்ல' என சொல்ல வைத்த அரசியல் சாதுரியனாக திகழ்ந்த துன் சாமிவேலுவின் புகழ் தலைமுறை தாண்டியும் வாழும்.
இன்று தனது 85ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் துன் சாமிவேலு அவர்கள் உடல் நல ஆரோக்கியத்துடன் என்றும் திகழ்ந்திட வேண்டும் என்று 'மைபாரதம்' இணைய ஊடகம் வாழ்த்தி வணங்குகிறது. வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம்.
No comments:
Post a Comment