Sunday 28 March 2021

சித்திரையே தமிழ் புத்தாண்டு- மலேசிய இந்து இளைஞர் பேரவை உறுதி

கோலாலம்பூர்-

அண்மையில் நாட்டில் பொங்கல் விழா, தமிழ்ப்புத்தாண்டு, பள்ளிகளில் இறை மறுப்புக் கொள்கை திணிப்புக் குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் மிகவும் வருத்தமளிக்கின்றன என்று மலேசிய இந்து இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பலரால் ஊடகங்களில் செய்யப்பட்ட அறிவிப்புகளாலும் அவற்றால் எழுந்துள்ள கருத்து மோதல்களாலும் இந்த நாட்டில் உள்ள இந்தியர்கள் குழப்பமும் வருத்தமும் அடைந்துள்ளனர். இந்தச் சர்ச்சைகளைக் குறித்து மலேசிய இந்து இளைஞர் பேரவையின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.


தமிழர் மரபில் நல்ல விளைச்சலைத் தந்த இறை ஆற்றலுக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் விழா சமயத்தோடு இரண்டறக் கலந்த  விழாவே ஆகும். நம் சமயத்தில் சாஸ்திரங்கள்படி ஒரு செயலைத் தொடங்கும் முன் நல்ல நேரத்தைப் பார்ப்பது வழக்கம். அதே போல், பொங்கல் நம் சமயம் சார்ந்த விழா என்பதால் பொங்கல் வைக்க தகுந்த நேரத்தைப் பார்த்துப் பொங்கல் வைக்கிறோம். அதுமட்டுமின்றி, பொங்கல் விழாவை 4 நாட்கள் விமரியாசையாகக் கொண்டாடும் நாம், பொங்களுக்கு முதல் நாளில் பழைய பொருட்களை எரித்துப் போகிப் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். 

ஆனால், தொடக்க காலத்தில் பயிர்கள் செழிக்க மழையைத் தந்த மருத நில தெய்வமான இந்திரனுக்கு நன்றி சொல்வதற்காகப் பூஜைகள் செய்து கொண்டாடப்பட்டது.  நாளடைவில் இப்பண்டிகை மக்களால் மறைக்கப்பட்டுப் பழைய பொருட்களை மட்டும் எரிக்கின்ற விழாவாக மாறியுள்ளது. தை முதல் நாளில் கொண்டாடப்படும் சூரிய பொங்கலில், பயிர்கள் செழித்து வளர ஒளியைத் தந்த சூரிய தேவனுக்கு மக்கள் தாங்கள் அறுவடை செய்த புது நெல்லிலிருந்து பெறப்பட்ட அரிசியைக் கொண்டு பொங்கலிட்டுப் படைப்பார். பொங்களின் இரண்டாம் நாள், உழவரோடு வயலை உழுவதோடு பாலையும் தந்து வாழ்வளிக்கும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கோமாதா பூஜை செய்து மாட்டுப் பொங்கலைக் கொண்டடுகிறோம். 

தொடர்ந்து, பொங்கலின் 3வது நாளான கன்னிப் பொங்கலில் அல்லது காணும் பொங்கலில் தங்களுக்கு நல்ல கண்வன் அமைய வேண்டும் என பெண்கள் கார்த்தியாயணி தேவியை வேண்டி விரதமிருந்து பறவைகளுக்கு உணவைத் தானமாகக் தருவார்கள். இவ்வாறு பொங்கல் விழா நான்கு நாட்களாக இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் வகையில் கொண்டாடப்படுகிறது. இதிலிருந்து பொங்கல் சமயம் சார்ந்த விழாதான் என்று தெளிவாகத் தெரிகிறது. எனவே, பொங்கல் சமய விழாவா அல்லது பண்பாட்டு விழாவா என்பதில் சந்தேகம் கொள்ளவேண்டாம். பொங்கல் சமய விழாதான் என்று மலேசிய இந்து இளைஞர் பேரவை திட்டவட்டமாகக் கூறிக்கொள்வதாக அதன் தலைவர் அருண்குமார் செங்கோடன் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்ப்புத்தாண்டு சித்திரையிலா அல்லது தையிலா எனும் கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. தமிழர்கள் பூமியின் மையக் கோட்டில் சூரிய ஒளி படும் நிலையிலிருந்து (equinox) வடக்கு நோக்கிச் செல்வதையும் பின்னர் தெற்கு நோக்கிச் செல்வதையும் வைத்தே ஆறு பருவங்களை நிர்ணயித்தனர்.  ஆறு பருவங்களுள் முதல் பருவமாகச் சித்திரையில் வரும் இளவேனில் பருவத்தில்தான் தான் இலைகள் துளிர் விடும், காய்கள் காய்க்கும் இதைப் புதிய தொடக்கத்தின் வெளிப்பாடாகப் பார்த்த அன்றைய தமிழர்கள் சித்திரை முதல் நாளேயே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். 

ஜோதிடத்திலும். சூரியன் மேஷ இராசியில் பயணம் செய்யும் போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். சித்திரையில் பிறக்கின்ற மேஷம் தான் இராசிகளில் முதலாவதாக இருக்கிறது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில் வரும் “திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாகவிண்ணூர்பு திரிதரும் வீங்குசெல்ல மண்டிலத்து” எனும் வரிகள் முதல் இராசியான மேஷ இரசியில்  சூரியன் நுழைவதே சித்திரை ஒன்று என்பதற்கான சான்றாகும். பாரதிதாசன் சொன்னதாகக் கூறப்படும் ‘நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு’ எனும் கவிதை வரிகள் அடங்கியுள்ள முழுப்பாடல் பாரதிதாசன் எந்தக் கவிதை தொகுதிகளிலும் காணக் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் பாரதிதாசன் கூறியதாகச் சொல்வது எவ்வாறு சாத்தியமாகும். 

ஆகவே, நம் முன்னோர்களான பழந்தமிழர் கணித்த வானியல் அடிப்படையிலான ஆண்டின் தொடக்கமான சித்திரை ஒன்று தான் தமிழ்ப்புத்தாண்டு என்பது தெளிவாகிறது.

மேலும், நாட்டிலுள்ள பல தமிழ்ப்பள்ளி நூலகங்களுக்கு இறைமறுப்புக் கொள்கைகள் அடங்கிய நூல்களை அன்பளிப்புச் செய்து அக்கொள்கையை மாணவர்களிடையே திணிப்பது கண்டனத்துக்குரியது. இதன் வழி ஆரம்ப பள்ளிகளிலும் உயர்கல்விக்கூடங்களிலும் இறைமறுப்பு கொள்கைகள் பரவி இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.  இவ்வாறான நடவடிக்கை மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான ஒரு செயலாகும். இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் எனும் தேசிய கோட்பாட்டை முன்னிறுத்தி நம் நாடு இயங்குகிறது. 

அதோடு தேசிய கல்வித் தத்துவத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல மலேசிய கல்வியானது இறைநம்பிக்கை, இறைவழி நிற்றல் எனும் அடிப்படையில்தான் செயல்படுகிறது. இந்த தேசிய கல்வித் தத்துவத்தின் அடிப்படையில் உருவாகும் மாணவர்கள், அறிவாற்றல், ஆன்மிகம், உள்ளம், உடல் ஆகிய கூறுகளில் சமன்நிலையும் இயைபும் பெற்ற மாந்தனாகத் திகழ்வர் என்பதே திண்ணம். கல்விக்கூடகங்களில் மட்டுமல்லாது தற்போது சமூக ஊடகங்களும் இறைமறுப்புக் கொள்கையைப் பறைசாற்றி வருகின்றன. 

உலகின் மூத்த சமயங்களுள் முன்மாதிரியாக திகழ்வது இந்து சமயமே. இறை நம்பிக்கையிலும் வழிப்பாட்டு முறையிலும் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நம்மிடையே இறை நம்பிக்கையை இழிவு செய்யும் ஊடுருவல் ஆலமரத்தை விஷம் வைத்து கொல்வதற்குச் சமமாகும். எப்படி ஆலமரத்திற்கு வைக்கப்பட்ட விஷம் சிறுக சிறுக வேரிலிருந்து கிளை, பூ, பழம் என்று எல்லாப் பகுதிகளுக்கும் பரவி ஆலமரத்தைச் சாய்த்து விடுகிறதோ அதே போல் இந்த இறைமறுப்புக் கொள்கை சிறுக சிறுக இந்துக்களிடையே பரவி சமய அடையாளத்தையே அழித்துவிடும். இறைமறுப்புக் கொள்கை பரப்புரையாளர்கள் இவ்வாறான செயல்களைத் தவிர்த்துவிடுமாறு மலேசிய இந்து இளைஞர் பேரவை எச்சரிக்கிறது.

நம்மிடையே ஏற்படும் மொழி, சமயம், சமூகம் குறித்த கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றுகூடி தனித்து கலந்தாலோசிக்க வேண்டும் என மலேசிய இந்து இளைஞர் பேரவை வலியுறுத்துகிறது. முகநூலில் பதிவு செய்வதாலும் காணொலி வழி பொது ஊடகங்களில் கருத்துக்களைப் பரவச் செய்வதாலும் பிற இனத்தவரால் நாம் எள்ளி நகையாடப்படுவோம். நம்மிடையே ஒற்றுமை இல்லாத போது நம் இனத்தவரின் நலனுக்காகக் கேள்வி கேட்பதும் குரல் எழுப்புவதும் முயல் கொம்பே.

எனவே, இந்திய இளைஞர்களைச் சமூக வளச்சியாளர்களாக உருமாற்ற அனைவரும் ஒன்றாக செயல்படுவோம். நம் இனத்தவரின் ஒற்றுமையே… நம் பலம் என்று  அருண்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment