ரா.தங்கமணி
ஷா ஆலம்-
உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் உபகாரச் சம்பளத்துடன் கூடிய கல்வித்துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் (ISMP) தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டிருப்பதற்கு பொருத்தமற்ற காரணங்களை கல்வி அமைச்சு அடுக்க வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
இந்நாட்டில் மூன்றாவது இனமான இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழ்மொழி பேசுபவர்களே ஆவர்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது இடைநிலைப்பள்ளகளில் அதிகமான தமிழாசிரியர்கள் இருப்பதால் இவ்வாண்டு இத்திட்டத்தில் தமிழ் மொழி இணைக்கப்படவில்லை என்பது ஏற்க முடியாத ஒன்றாகும்.
சீனம், கடஸான்,ஈபான் போன்ற பிற தாய்மொழிகளுக்கு முன்னிலை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழிக்கு வழங்கப்படாதது ஏன்?
உபகாரச் சம்பளத்துடனான கல்வியியல் இளங்கலை பட்டப்படிப்புக்கு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக இந்த பட்டப்படிப்புக்கு பாடத்திட்டங்களை தெரிவு செய்யும் குழுவில் யார்? உள்ளனர் என்ற கேள்வி இந்திய சமுதாயத்தில் எழுகிறது.
அண்மைய காலமாகவே இந்தியர்களின் உணர்வுகளை தூண்டிவிடும் வகையில் பல சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. அதில் புதிதாக இளங்கலை பட்டப்படிப்பு விவகாரமும் இணைந்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை |
குறிப்பாக, பெர்சத்து, பாஸ், தேசிய முன்னணி கூட்டணியில் அமைந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசு அமைந்ததிலிருந்து இந்தியர்களின் உணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.
நமக்கெதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை முறியடிக்க இந்திய சமுதாயம் இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும் என்று கணபதிராவ் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment