ரா.தங்கமணி
நீலாய்-
வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில் 3 நாடாளுமன்றத் தொகுதிகள், 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தேசிய முன்னணி வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசிய மக்கள் சக்தி கட்சி முன்வைத்துள்ளது.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 12ஆவது தேசிய பேராளர் மாநாடு இன்று நீலாய் டிவிசி லிட்டில் சென்னை மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு தொடர்ந்து போராடி வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறக்கப்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளும் 7 சட்டமன்றத் தொகுதிகளும் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் பேராளர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் சொன்னார் தெரிவித்தார்.
அதோடு தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக மலேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சபாவில் 60,70ஆம் காலகட்டங்களில் குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாட்டின் பொதுத் தேர்தல், இடைத் தேர்தல்களில் தேமுவின் வெற்றிக்காக பாடுபட்டு வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியை அங்கீகரிக்கும் இந்த தீர்மானங்களை தம் ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிலிம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது ம.ம.ச.கட்சிக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடிவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தேமு/ அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி உறுதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ம.ம.ச.கட்சியின் பேராளர் மாநாட்டில் தேமு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா முகமட் ஹசான் கலந்து கொண்டு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இதில் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் 700க்கும் மேற்பட்ட பேராளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment