Sunday 8 November 2020

பட்ஜெட் 2021இல் இந்தியர்கள் புறக்கணிப்பு: டான்ஶ்ரீ விக்கியின் கூற்றே நிதர்சன உண்மை

எழுத்து: ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மலேசிய இந்தியர்களின் வீழ்ச்சிக்கு மஇகாவே காரணம்... இந்தியர்களுக்கான மானியத்தை மஇகா கொள்ளையடிக்கிறது... மஇகாவை புறக்கணிக்கப்பட  வேண்டும் என்ற ஒவ்வொரு கோஷங்களுக்கு பின்னால் மஇகா எனும் மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி புறக்கணிக்கப்பட்டதன் விளைவு இன்று ஆளும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு மலேசிய இந்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

டான்ஶ்ரீ விக்கியின் நாளிதழ் அறிக்கை


கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களை புறந்தள்ளி ஒதுக்கிய ஒரு வரவு செலவு திட்டமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரையிலும் உணர்ந்துள்ளனர்.

கோவிட்-19 பாதிப்பில் உலகமே முடங்கி போயுள்ள நிலையில் மலேசிய இந்தியர்களின் பொருளாதார, சமூக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் மித்ராவுக்கு 100 மில்லியன் வெள்ளியும் தெக்குன் கடனுதவி திட்டத்திற்கு 20 மில்லியன் வெள்ளியும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படாத 2021 பட்ஜெட் மீது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

இன்றைய இந்த நிலைமைக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு ஒரே பதில் பலவீனமான சமுதாயமாக இந்தியர்கள் உருமாறி நிற்பதே ஆகும்.

'இன்றைய இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பதை மறந்து விட்டார்கள்.  மஇகா ஒன்றும் செய்யவில்லை. வழங்கப்படும் மானியங்களை எடுத்துக் கொள்கிறார்கள் என்று பொதுத் தேர்தலில் மஇகாவை தோற்கடித்தார்கள். 

இறுதியில் என்ன நடந்தது? அரசாங்கத்தை உரிமையோடு தட்டிக் கேட்கும் உரிமையை மஇகா இழந்தது. ஒன்றும் கிடைக்கவில்லையே என்று இப்போது அழுவதால் என்ன பயன்?' என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியுள்ள கருத்து இன்றைய சூழலுக்கு எவ்வளவு நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

இந்தியர்களை மட்டுமே சார்ந்திருந்த கட்சியான  மஇகாவை பலவீனப்படுத்தி பல இனங்களை உள்ளடக்கிய கட்சியான பிகேஆர், ஜசெக, அமானா, பாஸ் கட்சிகள் வலுவடைந்துள்ளன. ஆனால் இந்தியர்களுக்காக குரல் கொடுக்கும் வலிமை இந்திய சமூகம் இழந்து நிற்பதுதான் துயரிலும் துயரமானது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது 4 முழு அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் என 5 பேர் பதவி வகித்தபோதும் இந்தியர்களுக்கான பல விவகாரங்களில் 'மெளனம்' மட்டுமே பதிலாக கிடைத்தது.

Advertisement

இன்று பெரிக்காத்தா நேஷனல் அரசாங்கத்தில் அங்கம்  வகிக்கும் மஇகாவை பிரதிநிதித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

மக்களவையில் இந்தியர்களின் பிரதிநிதியாக எதிர்க்கட்சியில் 20 பேர் இருந்தாலும் அவர்களின் கதறலும் ஆவேசமும் ஒருபோதும் எடுபடாது. பலவீனமாக்கப்பட்ட மஇகாவின் பிரதிநிதியாக ஒருவர் மட்டுமே இருந்து கொண்டு மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாக குரலெழுப்பச் சொன்னால் இந்தியர்களின் ஆதரவை இழந்து விட்ட கட்சி என மஇகாவின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படலாம்.

2008 தேர்தலுக்குப் பின்னர் மஇகா புறக்கணிக்கப்பட்டதன் விளைவு இன்று இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுக்க தகுதியான மக்கள் பிரதிநிதி இல்லாத சூழலை உருவாக்கி உள்ளது.

இந்தியர்களே இந்தியர்களை சார்ந்துள்ள கட்சியையோ தலைவர்களையோ புறக்கணிக்கும்போது இந்திய சமுதாயம் கூனி குறுகியே நிற்க வேண்டிய அவலநிலைதான் தொடர்கதையாகும்.

பிகேஆர், ஜசெக ஆகிய கட்சிகளில் உள்ள இந்திய தலைவர்களை புறக்கணிக்காமல் அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதுபோல்  மஇகா தலைவர்களை புறக்கணிக்காமல் அவர்களையும் மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவோம். நம்முடைய பலத்தை நாமே கட்டமைப்போம். 

இனிமேலாவாது இந்திய சமுதாயம் விழித்துக் கொள்ளுமா?

No comments:

Post a Comment