Saturday 28 November 2020

MKPMS தலைவராக கணபதிராவ் நியமனம்- மலேசிய இந்தியர் குரல் வாழ்த்து

 ஷா ஆலம்-

சிலாங்கூர் மக்கள் சமூகநல மேம்பாட்டு கழகத்தின்(MKPMS) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு மலேசிய இந்தியர் குரல் (MIV) வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது.

இந்த நியமனப் பதவியின் வழி ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் இன்னும் சிலாங்கூர் மாநில மக்களுக்கு சமூக நல மேம்பாட்டு உதவிகளுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் ரா.ஆனந்தன் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள், முதியவர்கள் ஆகியோருக்கான சமூகநல உதவித் திட்டங்களில் ஆக்ககரமான செயலாக்க திட்டங்கள் வரையறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆனந்தன் மேலும் கூறினார்.

Thursday 26 November 2020

இந்திய தொழில்முனைவர்களுக்கு வெ.200 மில்லியன் கடனுதவி- மைக்கி பரிந்துரை

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இந்திய தொழில் முனைவர்கள் தங்களது வர்த்தகங்களை மேம்படுத்தி கொள்ள வெ. 200 மில்லியன் ஒதுக்கப்பட வேண்டும் என  நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) தெரிவித்தது.

கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. அதிலும் இந்திய தொழில் நிறுவனங்கள் பெரும்  பாதிப்பை சந்தித்துள்ளன. அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு  அரசாங்கம் தொழில் நிறுவனங்களுக்கு வர்த்தக கடனுதவிகளை வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில் இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவி புரியும் நோக்கில் வெ.200 மில்லியன் கடனுதவி திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ரூலிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக மைக்கியின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த கடனுதவித் திட்டத்தை எஸ்எம்இ உட்பட நாட்டில் செயல்படும் வங்கிகளின் மூலம் துரிதப்படுத்தலாம் என்ற அவர், இதனை கண்காணிக்கும் நடவடிக்கையாக செயலகம் ஒன்றை அமைக்கும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது என்றார் அவர்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மித்ராவுக்கு அறிவிக்கப்பட்ட வெ.100 மில்லியவை தவிர்த்து கூடுதலாக வெ.200 மில்லியன் கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதே போன்று தெக்குன் கடனுதவித் திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட வெ. 20 மில்லியனை வெ.50 மில்லியனாக உயர்த்துவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

நிதியமைச்சருடனான சந்திப்பில் மைக்கியின் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஏ.டி.குமாரராஜா, மைக்கியின் செயலவை உறுப்பினர்கள், முஸ்லீம் , சீன வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Thursday 19 November 2020

ஜாலான் பங்சாரில் அடையாளம் காணப்படாத ஆடவரின் சடலம் மீட்பு

 கோலாலம்பூர்-

உடலில் பல்வேறு காயங்களுடன் காணப்பட்ட 30 வயதுக்குட்பட்ட ஆடவரின் சடலம் ஜாலான் பங்சாரின் கண்டெடுக்கப்பட்டது.

அதிகாலை 5.38 மணியளவில் சாலையோரத்தில் படுத்திருந்த நிலையில் காணப்பட்ட ஆடவரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்பட்டவில்லை என்று பிரீக்பீல்ஸ்ட் காவல் நிலைய தலைவர் ஸைருனிஸாம் முகமட் ஸைனுடின் தெரிவித்தார்.

பந்தாய் டாலாம் நோக்கி செல்லும் சாலையில் அசைவற்ற நிலையில் ஆடவர் கிடப்பதாக மலாய் ஆடவரிடமிருந்து போலீஸ் தகவலை பெற்றது. அவ்வாடவரிடம் எவ்வித அடையாள ஆவணங்களும் காணப்படவில்லை. கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் அவ்வாடவர் உயிரிழந்திருக்கலாம். செக்‌ஷன் 302 குற்றவியல் சட்டத்தின் கீழ் இச்சமபவம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்

 இவ்விசாரணைக்கு உதவும் பொருட்டு தங்களது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் காணவில்லையென்றால் 603-22979222 எனும் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி சவப்பரிசோதனைக்காக யூனிவர்சிட்டி மலாயா மருத்துவக் கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

டாக்சி ஓட்டுனர்களுக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகளை வழங்கினார் செராஸ் எம்பி தான் கொக் வய்

ரா.தங்கமணி

செராஸ்-

உலகையே அச்சுறுத்தும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் வருமான பாதிப்புக்கு இலக்கான டாக்சி ஓட்டுனர்களும் தீபாவளி பெருநாளை கொண்டாடி மகிழும் வகையில் தீபாவளி பற்றுச்சீட்டுகளை வழங்கினார் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கொக் வய்.



கோவிட்-19 பாதிப்பினால் கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் (எம்சிஓ) பல்வேறு தொழில்நிறுவனங்கள் முடக்கப்பட்டன. அதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதோடு பெரும்பாலானோர் வேலை இழப்புக்கும்  ஆளாகினார்.

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் பொதுமக்களையே பெரிதும் நம்பியிருக்கும் டாக்சி ஓட்டுனர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கினர். வருமானம் ஏதுமின்றி பாதிப்புக்கு இலக்கான துறைகளில் டாக்சி தொழிலும் ஒன்றாகும் என்று ஜசெக தலைவருமான தான் கொன் வய் விவரித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு டாக்சி தொழில்துறையும் இன்றியமையாதது. எனவே பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கியுள்ள டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட அரசாங்கம் சிறப்பு உதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் நடைபெற்ற இந்த பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்வில் கோலாலம்பூர் வட்டாரத்தில் சேவையில் ஈடுபட்டு  வரும் 200 டாக்சி ஓட்டுனர்களுக்கு தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.


Friday 13 November 2020

மைக்கி முயற்சியில் வியாபாரிகளுக்கு கட்டண முறையில் TNB சலுகை

கோலாலம்பூர்-

மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின்  சம்மேளனத்தின் தலைமையில் இந்திய வர்த்தகச் சங்கங்கள் நேற்று  டி.என்.பி நிறுவனத்துடன் சந்திப்பு நடத்தினர்.

முன்னதாக மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, டி.என்.பி நிறுவனம்  வர்த்தகர்களுக்குச் சில சலுகைகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை  டி.என் பி வாரிய  இயக்குனர்  டத்தோ ரவிச்சந்திரனிடம் மைக்கி  முன்வைத்தாக மைக்கியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று டத்தோ ரவிச்சந்திரன் தலைமையில் டி.என்.பி.யின் சி.ஆர்.ஓ அதிகாரி டத்தோ மெகாட் ஜலாலுதீன் பின் மெகாட் ஹசானுடன்  மைக்கி சந்திப்பு நடத்தியது.

இந்தச் சந்திப்பில் மைக்கியின் பொதுச்செயாலாளர் டத்தோ ஏ.டி குமாரராஜா, பிரிமாஸ் தலைவர் தி. முத்துசாமி, பிரேஸ்மா துணைத் தலைவர்  டத்தோ மோஹசின் மற்றும் கோலாலம்பூர் டி.என்.பி தலைமை அதிகாரி ஏ. சிவனாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement


இந்தப் பேச்சுவார்த்தையின் வாயிலாக இந்திய வியாபாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி, டத்தோ ரவிச்சந்திரனின் முயற்சியில் தீபாவளியை முன்னிட்டு கிடைத்துள்ளது.

டி.என்.பியின்  பாக்கி நிலுவைக்  கடனைஅதிகமாக வைத்துள்ள வியாபாரிகள், 6 மாதம் முதல் 2 வருட காலகட்டத்தில் தவணை முறையில் செலுத்த டி.என்.பி. நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

இந்தச் சலுகை, பாக்கி கடனுக்கு மட்டுமே. அந்தந்த மாதக் கட்டணத்தை முறையாக வியாபரிகள் மாதம் தோறும் செலுத்த வேண்டும்.

அதோடு இந்தச் சலுகை, மாநில வர்த்தகச் சம்மேளனம் மற்றும் இந்திய வர்த்தகச் சங்கங்களான மிம்தா, மிண்டாஸ், பிரிமாஸ், பிரஸ்மா, மீதா, மிக்ஜா இன்னும் சில வர்த்தகச் சங்கங்களின் வாயிலாகக் கோரிக்கை வைக்கும் வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதாக, மைக்கியின் பொதுச் செயலாளர்  டத்தோ  டாக்டர் ஏ.டி குமராராஜா தெரிவித்தார். 

வியாபாரிகள் மாநில வர்த்தகச் சம்மேளனம், அந்தந்த வர்ததகச் சங்கங்கள் வாயிலாக  அணுக, இதற்கான விளக்கங்களைப்  பெற்றுக்கொள்ளலாம். அதோடு சங்கத்தின் வாயிலாக வரும் கோரிக்கை பாரங்களை மைக்கி பரிசீலனை செய்து,  இந்தச் சலுகையைப் பெற்றுத் தரும் என டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்.

இவ்வேளையில், இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்ட டத்தோ ரவிச்சந்திரனுக்கு, மைக்கி நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாக டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்!


ஆடம்பரம் தவிர்த்து ஆரோக்கியம் காப்போம்; டத்தோஶ்ரீ சரவணனின் தீபாவளி வாழ்த்து

 கோலாலம்பூர்-

இந்த வருட தீபாவளி இந்த நூற்றாண்டின் இதுவரை கண்டிராத ஒரு திருநாளாக, வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

தீபாவளி சந்தைகள் கிடையாது, தீபாவளி ஆரவாரம் கிடையாது, திறந்த இல்ல உபசரிப்பு கிடையாது, உற்றார் உறவினர் ஒன்று கூடல் கிடையாது.

ஆனால் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வணங்கி, பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று, வீட்டில் விளக்கேற்றி இருளை விலக்கி ஒளிபரப்பச் செய்வோம்.

உறவுகளை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், மனதளவில் இணைந்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம்.

ஆக இந்த வருடம் மனித நேயத்துடன், நம்மிடம் உள்ளதை அக்கம் பக்கத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரோடும் பகிர்ந்து குறிப்பாக இல்லாதோர்க்குக் கொடுத்து மகிழ்வோம். இதுநாள் வரை ஆடம்பரத் தீபாவளியாகக் கொண்டாடியிருக்கலாம். இன்று அந்த வசதி இல்லாமல் போகலாம். ஆனால் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு சிக்கனமாக இந்த தீபாவளியை வரவேற்போம்.

Advertisement

அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாடு, முகக்கவசம் அணிதல், இடைவெளிவிட்டு இருத்தல், போன்ற கொரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து சுகாதார முறையில் இந்த வருட தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம்.

கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து இன்னும் நாம் விடுபடவில்லை. அதோடு பொருளாதாரச் சிக்கல் வேறு. இதை எதிர் கொள்ள இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது. நம்மை பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்ள நம்மிடம் உள்ள திறமைகளை, தொழில்திறன்களை மேம்படுத்திக் கொள்வோம். அரசாங்கத்தின் திட்டங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உழைப்பதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோம்.

இப்படி பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். மகிழ்ச்சியாய், கோலாகலமாய் கொண்டாடிய தருணங்களைச் சிந்தித்து பார்ப்போம். இந்த தருணத்தில் ஆடம்பரம் அல்ல ஆரோக்கியம்தான் முக்கியம் என்பதை உணர்வோம்.

தீபாவளியின்  தத்துவம் இருள் நீங்கி ஒளி பிறக்கும், தீமை அழிந்து நன்மை பிறக்கும். அதே போல் கொரோனா நீங்கி சுதந்திரமாய் வாழும் நாள் தொலைவில் இல்லை என நம்புவோம். உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் என்று மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

Wednesday 11 November 2020

கிராண்ட் ஆசியான் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது 'பரமபதம்'-விக்னேஷ் பிரபு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 

திரைக்கு வரும் முன்னே பல்வேறு விருதுகளை குவித்துள்ள ‘பரமபதம்; திரைப்படம்  கிராண்ட் ஆசியான் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மலேசியாவில் முதல் முறையாக பேண்டஸி  திரைப்படமாக உருவாகியுள்ள ‘பரமபதம்’ திரைப்படத்தை விக்னேஷ் பிரபு, தனேஷ் பிரபு சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

திரையிடப்படுவதற்கு முன்பே  உலக அளவில் 34 போட்டிகளில்  பங்கேற்று 16 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இன்னும் இரு விருதுகளை பெறவில்லை. இந்நிலையில் IMDB (Internet Movie Data Base) நற்சான்றிதழை பெற்றுள்ள ‘பரமபதம்’ திரைப்படம்  மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது என்று இயக்குனர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.

கிராண்ட் ஆசியான் நற்சான்றிதழ்

இந்நிலையில் இந்தியாவை தளமாகக் கொணடு செயல்படும் கிராண்ட் ஆசியா உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மிக பெரிய சாதனையாக கருதப்படும்  கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பிரிவின் கீழ் உள்ள இந்த கிராண்ட் ஆசியா உலக சாதனை புத்தகத்தில் 18 விருதுகளை வென்ற பேண்டஸி திரைப்படம் என இடம்பெற்றுள்ளது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் சொன்னார்.

Advertisement

மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கு அடுத்த நிலையிலான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய  இத்திரைப்படம் கோவிட்-19 பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் சரியான தருணத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறோம்.

இயக்குனர் விக்னேஷ் பிரபு

ரசிகர்களை நிச்சயம் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘பரமபதம்’ திரைப்படத்திற்கு மலேசியர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று விக்னேஷ் பிரபு கேட்டுக்  கொண்டார்.

Monday 9 November 2020

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீட்டை நிதியமைச்சர் விரைவில் அறிவிப்பார்- டத்தோஶ்ரீ சரவணன்

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

அண்மையில் அறிவிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டத்தில் (பட்ஜெட்)  தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கீடு செய்யப்படாதது இந்திய சமுதாயத்தில் அதிருப்தி அலை ஏற்படுத்தியுள்ளதை நன்கு அறிவேன். ஆனால் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 பில்லியன் வெள்ளியில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிச்சயம் மானியம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் வாக்குறுதி வழங்கியுள்ளார் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் வெள்ளி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது. அப்போது அந்நிதி ஒதுக்கப்பட்டதில் தம்முடைய பங்கும் இருந்தது

ஆனால் 2021க்கான பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கப்படாதது குறித்து அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ள நிலையில் தாமும் நிதியமைச்சரிடம் இவ்விவகாரம் தொடர்பில் முறையிட்டுள்ளேன்.

Advertisement

புதிய பட்ஜெட்டில் தேசியப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி  என்று பாகுபாடு பிரிக்காமல் அனைத்துப் பள்ளிகளையும் ஒன்றிணைத்து 50 பில்லியன் வெள்ளி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் நிச்சயம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.

கூடிய விரைவில் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் தொடர்பில் நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார். அதுவரை இந்திய சமுதாயம் அமைதி காக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.


சுகாதாரப் பிரச்சினையால் காலை இழந்த காந்தனுக்கு தமிழால் நாம் இயக்கம் உதவி

ரா.தங்கமணி

ஈப்போ-

தமிழால் நாம் இயக்கத்தின் முயற்சியில் புந்தோங் வட்டாரத்தைச் சேர்ந்த காந்தன் /பெ செயமணியத்திற்குச் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இளம் வயதிலேயே முதுகுத் தண்டு பிரச்சனையால் நடக்க முடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் தனது இடது காலையும் இழந்தார் காந்தன். ஆயினும் தன் விடாமுயற்சியாலும் பல நல்லுள்ளங்களின்  உதவியாலும்  தனது கைவினைப் பொருட்களை ஈப்போ சுற்றுவட்டாரத்தில்  பண்டிகை விழாக் காலங்களில் விற்று தன் வாழ்வுக்கு பொருளாதாரம் ஈட்டி வந்தார்

இருப்பினும் தற்போது சுகாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ள அவர்  தனது சுயத்தொழிலை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், கோறனி நச்சுப் பரவாலால் நாட்டில் அறிவிக்கப்பட்ட நடமாட்டக்  கட்டுபாட்டு ஆணையாலும்  தனது அன்றாட வாழ்க்கைச் சுமை இன்னும்  அதிகரித்துள்ளதாகவும் அதனால் தனது பொருளாதாரம் தடைக் பட்டுள்ளாதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என்று "தமிழால் நாம்" இயக்க ஒருங்கிணைப்பாளரான  ரா.கதிரவன் தெரிவித்தார்.

முருகன் மாரிமுத்து

தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களைச் சமாளிக்க சமூகநலத் துறை வழங்கும் உதவித் தொகை மருத்துவச் செலவுக்கேப் போதாத நிலையில், தனக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டால், தனது சுயத் தொழிலை மீண்டும் தொடர்வேன் என்று தன்னம்பிக்கையுடன் "தமிழால் நாம்" இயக்கத்தினரை அனுகிய காந்தன் தெரிவித்தார். அவருக்கு  நம்பிக்கை ஒளியை விதைக்கும் வகையில் தனது இயக்க உதவியுடன் நன்கொடை வசூலிக்கப்பட்டு,   கைவினை பொருட்கள் தயாரிக்க  வெ.1200 மதிப்புள்ள அச்சுக் கருவிகள்,  சில உபகரணங்களும் வழங்கியதாக  முருகன் மாரிமுத்து விவாரித்தார்.

கதிரவன் ராஜா

"தமிழால் நாம்' புலனக்குழுத்  தொடங்கப்பட்டு இரண்டு மாதமே ஆன   போதிலும் அது சமுதாயச் சிந்தனைகளுடன் செயல்பட்டு வருகிறது என்றும், கடந்த செப்டம்பர் 27-ஆம் திகதி  " மக்கள் தொகை இயக்கம்" நடத்திய இயங்கலை மூலம் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதையும், தொடர்ந்து பல செயல் திட்டங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர் வாழ்வுக்குக்காவும் திட்டமிடப் பட்டுள்ளதாகவும், தகுந்த நேரத்தில் அவை செயல் வடிவம் பெறும் எனவும் இயக்கப் பொறுப்பாளர்கள்  தெரிவித்தனர்.  ஒரு கை ஓசை எழுப்பாது என்ற கருத்துக்கேற்ப எம் தமிழ் மக்கள் கரம் கோர்த்து இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மேலும் இயக்கத்தின் நிர்வாக அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.


Sunday 8 November 2020

உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக உயர்கல்விக்கூடங்கள் மூடப்பட்டு இணையம் வாயிலாக கல்வி போதனாமுறைகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் இங்கு பி40 பிரிவு குடும்பத்தைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் இணையம் வழி கல்வி பயில போதிய உபகரணங்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.

இவ்விவகாரம் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட சூழலில் 30 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டார்.

அவ்வகையில் இன்று இங்குள்ள தேசிய முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 30 மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வழங்கினார்.


ஷா ஆலம் நிர்வணா நினைவுப் பூங்காவில் துப்புரவுப் பணி

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் தங்களது முன்னோர்களை வழிபாடு செய்வது இந்துக்களின் முதன்மை கடமையாகும். அவ்வகையில் மரணித்து விட்ட தங்களது உறவுகளை நினைவுக் கொள்ளும் வகையில் தீபாவளி பெருநாளின் முதல் நாளன்று கல்லறை வழிபாட்டை இந்துக்கள்  மேற்கொள்வர்.

அதன்  அடிப்படையில் இங்கு  ஷா ஆலம், செக்‌ஷன் 21இல் உள்ள நிர்வணா நினைவு பூங்காவில் இந்துக்கள் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

6ஆவது ஆண்டாக மேற்கொள்ளப்படும்  இந்த துப்புரவுப் பணி  சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கம் (ஷா ஆலம் கைலாசம் காஸ்கேட்), சிலாங்கூர் மில்லினியம் சமூகநல இயக்கம், சிலாங்கூர் இந்திய சமூகநல சங்கம், சாய் சிவம் காஸ்கேட் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த துப்புரவுப் பணியை 3 இயக்கங்கள் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது சாய் சிவம் காஸ்கேட் இயக்கம் தம்முடன் இணைந்து தோள் கொடுத்தது என்று சிலாங்கூர் மில்லினியம் சமூகநல இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ கே.சரவணன் தெரிவித்தார்.

மரணத்திற்கு பின்னர் துயில் கொள்கின்ற இந்த நினைவுப் பூங்காவில் இந்துக்கள் தங்களது உறவுகளை வழிபடுவதற்கு ஏதுவாக  இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

தீபாவளி காலகட்டத்தில்  மட்டுமல்லாது பிற நாட்களிலும் தங்களது உறவுகள் துயில் கொள்கின்ற நினைவுப் பூங்காக்களில் துப்புரவுப் பணி மேற்கொள்வது அவசியம் என்று டத்தோஶ்ரீ கே.சரவணன், சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கத்தின் தலைவர் குனேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த துப்புரவுப் பணியில் கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஷோபா செல்வராஜு, ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் எஸ்பி சரவணன் செல்வராஜு, சிலாங்கூர் இந்திய சமூகநல சங்கத்தின் தலைவர் தினாகரன்,  சாய் சிவம் காஸ்கேட் இயக்கத்தின் பன்னீர், பத்மா,உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர்.


பி40 பிரிவைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் அன்பளிப்பு

ரா.தங்கமணி

ஷா ஆலம்- 

தீபாவளி பெருநாளை முன்னிட்டு பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அலாம் மெகா பகுதியைச் சேர்ந்த இந்திய சமூகத் தலைவர் கோபி 150 குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் வருமானத்தை பெரும்பாலான இந்தியர்கள் இழந்துள்ளனர். இந்த நன்னாளில் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு இந்த உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று கோபி தெரிவித்தார்.

ஹைக்கோம், கம்போங் பாரு மண்டபத்திலும் அலாம் மெகா முத்து மாரியம்மன் ஆலயத்திலும் நடைபெற்ற இந்த அன்பளிப்பு நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கலந்து கொண்டு உணவுப் பொட்டலங்களை எடுத்து வழங்கினார்.



இந்நிகழ்வு குறித்து பேசிய கணபதிராவ், தமது கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் உள்ள பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராய்டு, யுகராஜா, தர்மிஸி இந்திய சமூகத் தலைவர்கள் கோபி, பத்மநாதன், பொன்.சந்திரன் ஆகியோர் மளிகைப் பொருட்கள், பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

Advertisement

அதுமட்டுமல்லாது, இவ்வாண்டு மாநில அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு 4,000 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவை இம்மாநிலத்திலுள்ள இந்திய சமூகத் தலைவர்களின் மூலம்  பி40 பிரிவினர் அடையாளம் காணப்பட்டு வழங்கப்படுகிறது.



இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது அவசியமானது ஆகும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.



இந்த நிகழ்வின்போது அலாம் மெகா கிராமத் தலைவர் ஹாஜி மாலிக், ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் தர்மிஸி, இந்திய சமூகத் தலைவர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பட்ஜெட் 2021இல் இந்தியர்கள் புறக்கணிப்பு: டான்ஶ்ரீ விக்கியின் கூற்றே நிதர்சன உண்மை

எழுத்து: ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மலேசிய இந்தியர்களின் வீழ்ச்சிக்கு மஇகாவே காரணம்... இந்தியர்களுக்கான மானியத்தை மஇகா கொள்ளையடிக்கிறது... மஇகாவை புறக்கணிக்கப்பட  வேண்டும் என்ற ஒவ்வொரு கோஷங்களுக்கு பின்னால் மஇகா எனும் மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி புறக்கணிக்கப்பட்டதன் விளைவு இன்று ஆளும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு மலேசிய இந்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

டான்ஶ்ரீ விக்கியின் நாளிதழ் அறிக்கை


கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களை புறந்தள்ளி ஒதுக்கிய ஒரு வரவு செலவு திட்டமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரையிலும் உணர்ந்துள்ளனர்.

கோவிட்-19 பாதிப்பில் உலகமே முடங்கி போயுள்ள நிலையில் மலேசிய இந்தியர்களின் பொருளாதார, சமூக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் மித்ராவுக்கு 100 மில்லியன் வெள்ளியும் தெக்குன் கடனுதவி திட்டத்திற்கு 20 மில்லியன் வெள்ளியும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படாத 2021 பட்ஜெட் மீது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

இன்றைய இந்த நிலைமைக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு ஒரே பதில் பலவீனமான சமுதாயமாக இந்தியர்கள் உருமாறி நிற்பதே ஆகும்.

'இன்றைய இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பதை மறந்து விட்டார்கள்.  மஇகா ஒன்றும் செய்யவில்லை. வழங்கப்படும் மானியங்களை எடுத்துக் கொள்கிறார்கள் என்று பொதுத் தேர்தலில் மஇகாவை தோற்கடித்தார்கள். 

இறுதியில் என்ன நடந்தது? அரசாங்கத்தை உரிமையோடு தட்டிக் கேட்கும் உரிமையை மஇகா இழந்தது. ஒன்றும் கிடைக்கவில்லையே என்று இப்போது அழுவதால் என்ன பயன்?' என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியுள்ள கருத்து இன்றைய சூழலுக்கு எவ்வளவு நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

இந்தியர்களை மட்டுமே சார்ந்திருந்த கட்சியான  மஇகாவை பலவீனப்படுத்தி பல இனங்களை உள்ளடக்கிய கட்சியான பிகேஆர், ஜசெக, அமானா, பாஸ் கட்சிகள் வலுவடைந்துள்ளன. ஆனால் இந்தியர்களுக்காக குரல் கொடுக்கும் வலிமை இந்திய சமூகம் இழந்து நிற்பதுதான் துயரிலும் துயரமானது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது 4 முழு அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் என 5 பேர் பதவி வகித்தபோதும் இந்தியர்களுக்கான பல விவகாரங்களில் 'மெளனம்' மட்டுமே பதிலாக கிடைத்தது.

Advertisement

இன்று பெரிக்காத்தா நேஷனல் அரசாங்கத்தில் அங்கம்  வகிக்கும் மஇகாவை பிரதிநிதித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

மக்களவையில் இந்தியர்களின் பிரதிநிதியாக எதிர்க்கட்சியில் 20 பேர் இருந்தாலும் அவர்களின் கதறலும் ஆவேசமும் ஒருபோதும் எடுபடாது. பலவீனமாக்கப்பட்ட மஇகாவின் பிரதிநிதியாக ஒருவர் மட்டுமே இருந்து கொண்டு மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாக குரலெழுப்பச் சொன்னால் இந்தியர்களின் ஆதரவை இழந்து விட்ட கட்சி என மஇகாவின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படலாம்.

2008 தேர்தலுக்குப் பின்னர் மஇகா புறக்கணிக்கப்பட்டதன் விளைவு இன்று இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுக்க தகுதியான மக்கள் பிரதிநிதி இல்லாத சூழலை உருவாக்கி உள்ளது.

இந்தியர்களே இந்தியர்களை சார்ந்துள்ள கட்சியையோ தலைவர்களையோ புறக்கணிக்கும்போது இந்திய சமுதாயம் கூனி குறுகியே நிற்க வேண்டிய அவலநிலைதான் தொடர்கதையாகும்.

பிகேஆர், ஜசெக ஆகிய கட்சிகளில் உள்ள இந்திய தலைவர்களை புறக்கணிக்காமல் அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதுபோல்  மஇகா தலைவர்களை புறக்கணிக்காமல் அவர்களையும் மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவோம். நம்முடைய பலத்தை நாமே கட்டமைப்போம். 

இனிமேலாவாது இந்திய சமுதாயம் விழித்துக் கொள்ளுமா?

தமிழ்ப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிக்க துடிக்கிறதா பெரிக்காத்தான் நேஷனல் அரசு? - கணபதிராவ் காட்டம்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

அண்மைய காலமாக தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து வந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் (பட்ஜெட்) தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கப்படாதது அப்பள்ளிக்கு  சாவுமணி அடிக்க பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் துணிந்து விட்டதை காட்டுவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குற்றஞ்சாட்டினார்.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. முந்தைய தேசிய முன்னணி அரசாங்கமானாலும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமானாலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்களது வரவு செலவு திட்டத்தில் மானிய ஒதுக்கீடு செய்வதை தங்களது கடமையாகக் கொண்டிருந்தன.

ஆனால் கொள்ளைப்புறம் வழியாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இந்திய சமுதாயத்தை ஓரம்கட்டும் படலத்தில் நடவடிக்கையாகவே பட்ஜெட்டில் அனுகூலமான திட்டங்கள் இல்லாமல் ஒருதரப்பை சார்ந்திருக்கும் வகையில் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பட்ஜெட்டில் மித்ரா எனப்படும் இந்தியர் சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு 100 மில்லியன் வெள்ளியும் தெக்குன் கடனுதவித் திட்டத்தில் 20 மில்லியன் வெள்ளி மட்டுமே இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாரபட்சம் நிறைந்தது ஆகும்.

தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற அறைகூவல் அண்மைய காலமாக அதிகரித்திருந்த நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிக்கும் முதல் நடவடிக்கையாகவே 2021ஆம் ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளது என்று அலாம் மெகா  முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கணபதிராவ் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு தீபாவளி பொட்டலங்கள் அன்பளிப்பு

 ரா.தங்கமணி

கிள்ளான் -

தீபாவளி பெருநாளை முன்னிட்டு கோத்தாரா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு இந்திய கிராமத் தலைவர் தேவன் வெள்ளையன் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினார்.

கோவிட்- 19 வைரஸ் தொற்று பாதிப்பால் பெரும் பொருளாதார நெருக்கடிடை எதிர்கொண்டுள்ள  இந்தியர்களுக்கு உதவும் வகையில் இந்த மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஏற்பாட்டில் கிராமத் தலைவருக்கு வழங்கப்பட்ட 80 பொட்டலங்களும் தனது முயற்சியில் 45 பொட்டலங்களும் சேர்த்து 115 குடும்பங்களுக்கு இந்த பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று தேவன் குறிப்பிட்டார்.

Advertisement


கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் சுந்தரம் முன்னிலையில் பி40 பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு இந்த உதவிப் பொட்டங்கள் வழங்கப்பட்டன.

தீபாவளி பெருநாள் கொண்டாட்டங்களில் பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு உதவிப் பொட்டலங்களை வழங்க முன்வந்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி, கணபதிராவ் ஆகியோருக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.

தீபாவளி நாளில் ஆலயங்களை இருநாட்களுக்கு திறக்க அனுமதிக்க வேண்டும்- பொது இயக்கங்கள் கோரிக்கை

ரா.தங்கமணி

இவ்வாண்டு தீபாவளி பெருநாளை முன்னிட்டு ஆலயங்களை திறப்பதற்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி அளித்துள்ள அரசாங்கம் அம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு சார்பற்ற பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கோப்புப் படம்

உலகை அச்சுறுத்தும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்திற்கு புதிய வழிகாட்டி நடைமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் தீபாவளி முதல் நாள் மட்டும் காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே திறப்பதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது.

ஆனால் தீபாவளி பெருநாள் அமாவாசை நாளில் வருவதால் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பலர் நினைத்திருக்கலாம். பெரும்பாலான இந்துக்கள் தங்களது  முன்னோருக்கு அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பதை தங்களது  முக்கிய கடமையாகக் கொண்டுள்ளனர்.

முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையிலும் கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் பங்கெடுப்பதுபோல் இந்தியர்கள் இந்த நாளில் தான் ஆலயங்களுக்கு வருவார்கள் என்ற கட்டுப்பாடு கிடையாது. வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஆலயங்களுக்கு செல்வர். அதிலும் அமாவாசை நாள் இரு நாட்களுக்கு வருவதால்  இந்துக்கள் ஆலயங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கத்தின் தலைவர் அ.குணேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

குணேந்திரன்                            தேவன் 

அதோடு தீபாவளி பெருநாளுக்கு ஒருநாள்  மட்டுமே ஆலயங்கள் திறப்பதை காட்டிலும் இரு நாட்களுக்கு திறந்து விடுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். அமாவாசை நாளில் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு  இந்துக்களுக்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதி இந்திய சமூகத் தலைவர் தேவன் வெள்ளையன் கேட்டுக் கொண்டார்.

சுப்பிரமணியம்      ஶ்ரீ திவ்யா

கோவிட்-19 பாதிப்பு காலகட்டத்திலும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியில் அமாவாசை இருநாட்களுக்கு வருவதால் ஆலயங்களை 14,15ஆம் தேதிகளில் திறப்பதற்கு அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை இந்துக்கள் ஒரு புனித காரியமாக கருதுகின்றனர். அத்தகையை நாளில் இந்துக்கள் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு  வாய்ப்பளிக்கும் வகையில் ஆலயங்களை இரு நாட்களுக்கு திறப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று மலேசிய மனிதநேய ஒற்றுமை இயக்கத்தின் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் ராஜு,  மலேசிய மனிதநேய ஒற்றுமை இயக்கத்தின் சமயப் பிரிவு பொறுப்பாளர் ஶ்ரீதிவ்யா ஆகியோர் வலியுறுத்தினர்.

               சிவராஜன்          டத்தோஶ்ரீ சரவணன்

மேலும், தீபாவளி நன்னாளில் இந்துக்கள் ஆலயம் செல்வதை கடமையாகக் கொண்டுள்ளனர். அத்தகைய நாளில் அவர்களின் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய புனித காரியத்தை நிறைவேற்றும் வகையில் இரு நாட்களுக்கு ஆலயம் திறப்பதற்கு  தமது முந்தைய முடிவை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மில்லினியம் சமூக இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ கே.சரவணன், சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கத்தின் உறுப்பினர் கே.சிவராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.

Friday 6 November 2020

தாய்மொழிப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காத 2021 பட்ஜெட்- புறக்கணிப்பின் படலமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட் 2021) இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  தாய்மொழி பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடு விவரிக்கப்படாதது பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் மீதான நடுநிலைப்போக்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கோப்புப் படம்

நிதியமைச்சர் தெங்கு ஷஃப்ருல் இன்று அறிவித்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 5,040 கோடி வெள்ளி  ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால் இதில் எத்தனை கோடி வெள்ளி தாய்மொழிப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது என்ற விவரத்தை அறிவிக்கவில்லை.

முந்தைய தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தேசியப் பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி,  சமயப்பள்ளி என நிதி ஒதுக்கீடு விவரிக்கப்படும்.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ், சீனப்பள்ளிகளுக்கு தலா 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் கூட தனியார் சீன இடைநிலைபள்ளிகளுக்கு 2019 பட்ஜெட்டில் வெ.12 மில்லியன், 2020 பட்ஜெட்டில் வெ. 20 மில்லியன் ஒதுக்கப்பட்ட நிலையில் 2021 பட்ஜெட்டில் ஒரு காசை கூட ஒதுக்கீடு செய்யப்படாதது சீன சமூகத்தை பிரதிநிதிக்கும் அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.