Sunday 4 October 2020

பிகேபி-ஐ காட்டிலும் கூடுதல் கவனம் தேவை - கணபதிராவ்

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

நாட்டில் தற்போது அதிகரித்து வரும்  கோவிட்-19 பாதிப்புகளால்  மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு (பிகேபி) மீண்டும் அமல்படுத்தப்படுவதை காட்டிலும் மக்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதே சிறந்ததாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கம் கோவிட்-19 வைரஸ் தொற்று மலேசியாவுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை பிகேபி-ஐ அமல்படுத்தியது.

இந்நடவடிக்கையினால் பல தொழிற்சாலைகளும் வணிக மையங்களும் மூடப்பட்டு பலர் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சி கண்டதோடு பல தொழிற்கூடங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு பலர் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.

இப்போதுதான் தொழிற்கூடங்களும் வணிக மையங்களும் திறக்கப்பட்டு மீண்டும் மக்கள் வேலைக்குச் சென்று தங்களின் பொருளாதார நிலையை  வலுபடுத்திக் கொள்ளும் சூழலில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு மீண்டும் மூன்று இலக்காக உயர்வு கண்டு வருகிறது.

இத்தகைய சூழலில் மீண்டும் பிகேபி அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி மலேசியர்களிடையே எழுந்துள்ளது. மீண்டும் பிகேபி அமல்படுத்தி அதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியும் வேலை வாய்ப்பின்மையும் உருவெடுத்து விடக்கூடாது.

இதனால் நாடும் மக்களும் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கக்கூடும் என்பதால் மக்கள் தங்களின் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கும் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும், கோவிட்-19க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது, சமூக இடைவெளி, முகக் கவரி அணிதல் போன்றவற்றை மேற்கொண்டு கோவிட்-19 பாதிப்பிலிருந்து விலகி நிற்க மக்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.


No comments:

Post a Comment