ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
விபத்தொன்றில் சிக்கி கடந்த ஈராண்டுகளாக உடல் செயலற்ற நிலையில் தவிக்கும் இளைஞருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது சுங்கை சிப்புட் புளூ பிரதர்ஸ் சமூகநல இயக்கம்.
சுங்கை சிப்புட், கம்போங் முஹிபாவைச் சேர்ந்த 25 வயதான பவித்ரன் விபத்தொன்றில் சிக்கி உடல் செயலிழந்த நிலையில் படுக்கையிலேயே தனது வாழ்நாளை கடத்தி வருகிறார். அவரை அவரது சகோதரியும் மாமாவும் பராமரித்து வந்த நிலையில் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்ததால் பவித்ரனுக்கு வேண்டிய பால் மாவு, உணவுப் பொருட்கள், உலர் துணிகள் (PAMPERS) ஆகியவற்றை வாங்குவதற்கு பண நெருக்கடியை எதிர்கொண்டனர்.
பவித்ரனின் நிலையை அறிந்த சுங்கை சிப்புட் புளூ பிரதர்ஸ் சமூகநல இயக்கத்தின் தலைவர் முருகேசன் சுப்பிரமணியம், அவர்தம் குழுவினர் 2,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்களை வழங்கி உதவினர்.
கோவிட்- 19 வைரஸ் தொற்று காரணமாக பலர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் பவித்ரனின் சூழ்நிலையை உணர்ந்து அவருக்கு உதவிக்கரம் நீட்டியதாக முருகேசன் குறிப்பிட்டார்.
பவித்ரனின் வீட்டுக்குச் சென்ற முருகேசன், இயக்கத்தின் உதவித் தலைவர் பாலன், பொருளாளர் கருணாகரன் ஆகியோர் பவித்ரனின் மாமா, சகோதரியிடம் உதவிப் பொருட்களை வழங்கினர்.
No comments:
Post a Comment