Sunday, 4 October 2020

தனிமைப்படுத்திக் கொள்ள தவறியவர் அரசியல்வாதியானாலும் சட்டம் பாய வேண்டும்- கணபதிராவ்

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சபா மாநிலத்தில் சென்று வந்தவர்களால்  தீகற்ப மலேசியாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலுக்கு காரணமானவர்கள் என்று கண்டறியப்படுபவர்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை பாய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

அண்மையில் இந்தியாவின் சிவகங்கை மாவட்டத்திற்குச் சென்று திரும்பிய ஆடவரால் கெடாவில் கோவிட்- 19 வைரஸ் தொற்று பரவியதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

‘சிவகங்கா திரள்’ என அடையாளமிடப்பட்ட அந்த வைரஸ் பரவலுக்கு காரணமான ஆடவர், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தனது உணவகத்திற்குச் சென்றதால் அங்கு பலருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று பரவியதாக குற்றஞ்சாட்டி அவருக்கு கூடுதலான அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோன்று தற்போது சபா மாநில தேர்தலில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் கெடாவுக்கு வந்த அரசியல் பிரமுகர் ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாததால் அவரின் துணையரின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 பரவல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அச்சத்தில் 600க்கும் அதிகமான மாண்வர்கள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.

இவ்விவகாரத்தில் உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாய்ந்ததுபோல் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள தவறிய அரசியல் பிரமுகருக்கு எதிராகவும் சட்டம் பாய வேண்டும்.

சட்டம் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அதை விடுத்து அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் மக்களுக்கு ஒன்றுமாக இருக்கக்கூடாது என்று கணபதிராவ் வலியுறுத்தினார்,


No comments:

Post a Comment