Thursday 17 September 2020

LTTE விவகாரம்: தீவிரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டதே தெரியாதபோது எவ்வாறு ஆட்சேபிக்க முடியும்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 

2014இல் தீவிரவாதப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைக்கப்பட்டதை 3 மாதக் காலத்திற்குள் நீக்க விண்ணப்பித்திருக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏற்கப்பட முடியாத ஒன்றாகும் என்று டாக்சி ஓட்டுநரான வீ.பாலமுருகன் கருத்துரைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மலேசியாவில் எவ்வித அசம்பாவிதத்தையும் தீவிரவாதத் தாக்குதலையும் தொடுத்ததில்லை. அதன் அடிப்படையில் அவ்வியக்கம் தீவிரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தன்னை கடந்தாண்டு கைது செய்யும் வரை தெரியாது.

அதன் அடிப்படையிலேயே இவ்வாண்டு சொஸ்மா சட்டத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாதப் பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக நீதிமன்றத்தை நாடினேன்.

ஆனால் 2014இல் தீவிரவாதப் பட்டியலில் இவ்வியக்கம் இணைக்கப்பட்டதை எதிர்த்து 3 மாதங்களுக்குள் ஆட்சேபம் செய்திருக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.

தீவிரவாதப் பட்டியலில் இவ்வியக்கம் இணைக்கப்பட்ட தகவலே தெரியாத நிலையில் எவ்வாறு அதனி எதிர்த்து ஆட்சேபம் செய்ய முடியும்? என்று சுங்கைம ்சிப்புட்டைச் சேர்ந்த பாலமுருகன் கேள்வி எழுப்பினார்.

இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும்  இனிவரும் காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை காரணம் காட்டி யாரும் சிறைவாசம் அனுபவிக்கக்கூடாது என்ற நோக்கில் தன்னுடைய சட்டப் போராட்டம் தொடரும் என்று பாலமுருகன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment