Thursday 24 September 2020

மஇகாவை சாடுவதை நிறுத்துங்கள்; காமாட்சிக்கு உஷா நந்தினி எச்சரிக்கை

கோ. பத்மஜோதி

கோலாலம்பூர்-

2 ஆண்டுகளுக்கு முன்பே தம்மை அவதூறாக பேசியவரை அப்போதே தண்டிக்காமல் அவ்விவகாரத்தை இப்போது அரசியல் சர்ச்சையாக்க முற்படுவதை சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி துரைராஜு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மஇகாவின் மகளிர் பிரிவுத் தலைவி திருமதி உஷா நந்தினி வலியுறுத்தினார்.

பெண்களை இழிவாகவும் அவதூறாகவும் பேசுவதை  மஇகா மகளிர் பிரிவு ஒருபோதும் அனுமதிக்காது. பெண்களை இழிவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட  வேண்டியவர்கள் தான். திருமதி காமாட்சி துரைராஜு எதிர்க்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர் மீது அவதூறு பரப்பப்படுவதையும் இழிவாக பேசுவதையும் மஇகா மகளிர் பிரிவு ஏற்காது. 

ஆனால் அதற்காக மஇகாவையும் மகளிர் பிரிவையும் தவறாக பேசுவதை நாங்கள்ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். 

தன்னை இழிவுப்படுத்தி பேசியவரை தண்டிப்பதற்குரிய வழிவகையை தேடாமல் மஇகா  மகளிரை இழிவாக பேசுவதுதான் ஒரு மாண்புமிகுவின் மாண்புக்குரிய அழகா?

பெண்களை இழிவுப்படுத்தும் அநாகரீகச் செயல் மஇகாவில் ஒருபோதும் அனுமதிப்படாது.  இன்று பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் காண்பதில் அடித்தளமிட்டதில் மஇகாவுக்கு பெரும் பங்குண்டு

பெண்கள் கல்வி உயர்ந்தவர்களாகவும்  பொருளாதார மேம்பாட்டிற்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும்  உயர்மட்ட பதவி வகிப்பதற்கும் வித்திட்டது மஇகா தான். அதனை மறந்து காமாட்சி துரைராஜு பேசக்கூடாது.

தனிநபர் ஒருவரின் அநாகரீகச் செயலை கட்சியுடன் இணைத்து தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனையும் மகளிர் பிரிவையும் சாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை அவதூறாக பேசியவரை தண்டிக்க சட்ட நடவடிக்கை எடுங்கள்; அதை விடுத்து கட்சியை சீண்டினால் சட்டம் உங்கள் மேல் பாயும் என்று மஇகாவை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருமதி காமாட்சிக்கு எச்சரிக்கை விடுத்தார் திருமதி உஷா நந்தினி.

No comments:

Post a Comment