Thursday 16 July 2020

பேரா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாகிறார் விஜயதாமரை?

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் ம இகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தற்போது மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக குமாரி விஜயதாமரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ  அஹ்மாட் பைசால் அஸுமுவின் தம்புன் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் பணியாற்றும் விஜயதாமரை அங்குள்ள இந்தியர்களின் பிரச்சினையை கவனித்து வரும் நிலையில், மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவதன் வழி  இம்மாநிலத்திலுள்ள இந்தியர்களின் பிரச்சினையை கவனிக்கப்படும்.

இது குறித்து விஜயதாமரையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி நியமனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இப்பொறுப்பில் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் தாம் கடமையாற்றி வருவதாக கூறினார்.

ஆலயம் உட்பட பேரா மாநில இந்தியர்களின் பிரச்சினைகள் தமது நேரடி பார்வையின் கீழ் கவனிக்கப்படும் என்று டத்தோஶ்ரீ பைசால் அஸுமு அண்மையில் அறிவித்திருந்த நிலையில் தேசிய முன்னணி ஆட்சியில் மஇகாவுக்கு  வழங்கப்பட்ட சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் கேள்விக்குறியாகின.

மஇகாவுக்கு சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் மந்திரி பெசார் அலுவலகத்தில் மகஜர் வழங்கின.

 மேலும், மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக குமாரி விஜயதாமரை நியமனம் செய்யப்படுவது சிறப்பான முடிவு என்று சுங்கை சிப்புட் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த உமாபரன் குறிப்பிட்டார்.
எவ்வித கட்சி பேதமுமின்றி பொதுநிலையில் அனைத்தத் தரப்பினருடனும் இணங்கி பணியாற்றக்கூடிய ஒருவரை தனது சிறப்பு அதிகாரியாக டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசால் அஸுமு நியமனம் செய்வது வரவேற்கக்கூடியது ஆகும் என்று சமூகச் சேவையாளருமான அவர் மேலும் சொன்னார். 

No comments:

Post a Comment