Wednesday, 3 June 2020

பேரா மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் பதவிக்கு புதுமுகத்தை நிரப்புமா மஇகா?

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநிலத்தில் புதிதாக ஆட்சிமையத்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இந்தியர்களுக்கான பிரதிநிதி இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது மக்களிடையேயும் அதிருப்தியான சூழல் நிலவுகிறது.

பேரா மாநிலத்தில் இந்தியர் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் யாரும் இல்லாத சூழலில் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் தேசிய முன்னணி ஆட்சியில்  கடந்த 2009ஆம் ஆண்டு முதல்  2018ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.

2009இல் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கமும் 2013இல் டத்தோ வ.இளங்கோவும் இப்பதவியை அலங்கரித்து வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றார்.

அதேபோல் 2013ஆம் ஆண்டு பொதுத்  தேர்தலுக்குப் பின்னர் மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் டத்தோ சி.சிவராஜுக்கு மந்திரி பெசாரின்  சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டது. அதுவும் தற்போது காலியாக கிடக்கிறது.
இப்போது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி புரியும் இம்மாநிலத்தில் இன்னுமும் இந்தியருக்கான பிரதிநிதி நியமிக்கப்படாதது பெரும் மர்மமாகவே இருக்கிறது.

இதனிடையே, இம்மர்மத்திற்கு விடை காணும் வகையில் இந்தியர் பிரதிநிதியாக புதுமுகத்தை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு விரும்புவதாகவும் ஆனால் மஇகாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டவரில் பழைய முகமே இடம்பெற்றுள்ளதுதான் இந்திய பதவி நியமனத்திற்கு காலதாமதம் என்று அறியப்படுகிறது.

பேரா மஇகாவின் தலைவராக டத்தோ இளங்கோவே பதவி வகித்து வரும் சூழலில் மந்திரி பெசாரின் ஆலோசகர் பதவிக்கும் அவர் குறி வைத்துள்ளார் என்பதும் வெள்ளிடைமலை. ஆனால் பதவியில் இருந்தவர்களை காட்டிலும் புதுமுகத்தை மஇகா சிபாரிசு செய்ய வேண்டும் என்று மந்திரி பெசார் எதிர்பார்ப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
 
மஇகாவில் புதுமுகங்களே இல்லையா? என சில ஆய்வுகளை மேற்கொண்டதில் அரசியலும் கட்சிப் பணிகளிலும் சமூகச் சேவைகளும் திறம்பட சேவையாற்றி வருபவர்கள் பலர் உள்ளனர். 
ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவர் எஸ்.ஜெயகோபி, தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் எம்.வீரன்,புக்கிட் கந்தாங் மஇகா தொகுதித் தலைவர் ஜி.சண்முகவேலு,கோலகங்சார் மஇகா தொகுதித் தலைவர் ராமச்சந்திரன், தாப்பா மஇகா தொகுதித் தலைவர் சந்தனசாமி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன், பேரா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெயகணேஷ் என புதுமுகங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகலாம்.

ஜெயகோபி ஈப்போ வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவர் ஆவார். கடந்த பொதுத் தேர்தலின்போது புந்தோங் தொகுதி தேமு ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறந்த முறையில் சேவையாற்றினார். புந்தோங் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கக்கூடிய தகுதியும் அரசியலில் நிறைந்த முதிர்ச்சியும்  கொண்டவர் ஜெயகோபி.




மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரன், தைப்பிங் தொகுதியில் சிறந்த சேவைகளை ஆற்றி வருவதோடு தற்போது தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். முன்பு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.




புக்கிட் கந்தாங் மஇகா தொகுதித் தலைவர் ஜி.சண்முகவேலு அத்தொகுதியில் நிறைவான சேவையை வழங்கி  வந்துள்ளதோடு பேரா மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.






கோலகங்சார் மஇகா தொகுதித் தலைவர் ராமசந்திரன் அத்தொகுதியில் நன்கு அறியப்பட்ட சமூகச் சேவராக திகழ்கிறார். கோலகங்சார் மாநகர் மன்ற உறுப்பினராகவும் பேரா மஇகா இளைஞர் பிரிவிலும் திறம்பட சேவையாற்றியுள்ளார்.





தாப்பா மஇகா தொகுதித் தலைவர் சந்தனசாமி, தன் தொகுதியில் பல சேவைகளை திறம்பட ஆற்றி வருகிறார். தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் இத்தொகுதியில் இந்தியர்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு கண்டு வரும் சந்தனசாமி தற்போது தாப்பா மாநகர் மன்ற உறுப்பினராகவும் சேவையாற்றி வருகின்றார்.



அரசியலின் அடையாளமாக திகழும் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட கி.மணிமாறன், இங்குள்ள இந்தியர்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வந்துள்ளார். மஇகா தலைமைத்துவம், மாநில அரசு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் என பலரின் நன்மதிப்பையும் பெற்று சிறந்த சேவையை இங்கு வழங்கி வருகின்றார். பேரா மஇகா இளைஞர் பிரிவிலும் இவர் சேவையாற்றியுள்ளார்.


சமூகச் சேவையில் இளைய ரத்தம் பாய்ச்சப்படும் வகையில் பேரா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெயகணேஷின் சேவையையும் நாம் புறக்கணிக்க முடியாது. தம்புன் தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரான இவர், மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் பேரா மாநில முன்னாள் தலைவராகவும் பணியாற்றி சிறந்த சேவைகளை பதிவு செய்துள்ளார்.


மேலும், மஇகாவை தவிர்த்து மலேசிய தமிழ் இளைஞர் 
மணிமன்றத்தின் பேரா மாநிலத் தலைவராக பதவி வகித்து வரும் ஆனந்தனும் தற்போது வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். சமூகச் சேவையில் இவரின் ஈடுபாடும் பாராட்டும் வகையில்தான் உள்ளது.



பேரா மாநில மந்திரி பெசார் ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய  பதவிகளுக்கு தகுதியானவர்கள் கட்சிக்குள்ளேயே இருக்கும் நிலையில்  மஇகா தலைமைத்துவம் புதுமுகத்தை அப்பதவியில் நிரப்புமா? அல்லது நான்தான் ராஜா நானே மந்திரி எனும் போக்கில் இருக்கும் வாய்ப்பை தவற விட்டு காலம் கடந்து சிந்திப்பார்களா? எனும் முடிவை மஇகாவிடமே விட்டு விடுவோம்.

No comments:

Post a Comment