ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
சபாநாயகர் பதவியிலிருந்து இம்மாதம் விலகும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மஇகாவை வலுபடுத்தும் தீவிர முயற்சியில் களம் கண்டு வருகிறார்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைந்துள்ள இந்த சூழலில் மஇகா வலுபெறவுள்ளதை உறுதி செய்யும் களப்பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் மஇகாவுக்கான அங்கீகாரம் கிடைப்படுவதோடு இந்தியர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் மாநில ரீதியிலான தமது பயணத்தை தொடங்கியுள்ளார்.
அண்மையில் பகாங் மாநில மந்திரி பெசாரைச் சந்தித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், அம்மாநில இந்தியர்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அதேபோன்று ஜொகூர் மாநில மந்திரி பெசாரையும் சந்தித்துள்ள டான்ஸ்ரீ விக்கி, அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மாநிலந்தோறும் வருகை மேற்கொள்ளும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேரா மாநிலத்திற்கும் வருகை புரிய வேண்டும்.
பேரா மாநிலம் மஇகாவுக்கு என்றுமே சிறப்பானதாகும்.
மஇகாவின் 5ஆவது தேசியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தன் பிறந்ததும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்ததும் பேரா மாநிலத்தில் உள்ள சுங்கை சிப்புட்டில் தான்.
தற்போது மனிதவள அமைச்சராக உள்ள டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூட பேரா மாநிலத்தில் உள்ள தாப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இத்தனை பெருமைகளை கொண்டுள்ள பேரா மாநில அரசில் மஇகாவின் பிரதிநிதி யாரும் இல்லாத நிலையில் கடந்த இரு தவணைகளாக வழங்கப்பட்டு வந்த மந்திரி பெசாரினர சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் இன்னமும் மஇகா பிரதிநிதிகள் நியமிக்கப்படாமல் இருப்பது பல கேள்விகளை உருவாக்கி வருகிறது.
2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து 2009இல் ஆட்சியை கைப்பற்றிய தேசிய முன்னணி அரசில் மஇகா சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் டான்ஸ்ரீ எஸ்.வீரசிங்கம் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் லுமூட் தொகுதி மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால் இப்போது பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மஇகா அங்கத்துவம் பெற்றிருக்கும் நிலையில் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் பதவி இன்னமும் மஇகாவுக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளை மஇகாவுக்கு உறுதி செய்ய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேரா மாநிலத்திற்கு களமிறங்க வேண்டும்.
அதன்வழி பேரா மஇகாவும் இம்மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கும் ஒரு ஆக்ககரமான நடவடிக்கையை முன்னெடுக்க இது வழிவகுக்கலாம்.
நீங்க வரணும் டான்ஸ்ரீ...
No comments:
Post a Comment