Tuesday, 23 June 2020

அம்னோவுக்கு கொடுக்கப்பட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளை மஇகாவுக்கே வழங்குக-டத்தோ இளங்கோ


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநிலத்தில் அம்னோவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் மீண்டும் மஇகாவிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பேரா மாநில மஇகாத் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ வ.இளங்கோ வலியுறுத்தினார்.

2008இல் நிகழ்ந்த அரசியல் சுனாமிக்குப் பின்னர் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நாட்டின்  13ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் பாரம்பரியத் தொகுதிகளான பாசீர் பஞ்சாங், பெராங் ஆகிய தொகுதிகளில் அம்னோ வேட்பாளர்கள் போட்டியிட களமிறக்கப்பட்டனர்.

வீடியோவில் காண்க: https://www.youtube.com/watch?v=8EI7K-G2wRs


அதேபோன்று 2018இல் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலிலும் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது மஇகா. ஆனால் 2018ஆம் ஆண்டு தேர்தலில் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அம்னோ, பெராங், பாசீர் பாஞ்சாங் தொகுதிகளில் தோல்வி கண்டது.

கடந்த இரு தேர்தல்களில் தனது பாரம்பரியத் தொகுதிகளை விட்டுக் கொடுத்த மஇகா அதற்கு பதிலாக சுங்காய், புந்தோங், ஜெலாப்பாங் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அங்கு தோல்வியையே மஇகா சந்திக்க நேர்ந்தது.

மூன்று தொகுதிகளிலும்  மஇகா தோல்வி கண்டதால் மாநில அரசில் இடம்பெற முடியாமல் இந்தியர்களை பிரதிநிதிக்கும் வகையில் சிறப்பு ஆலோசகர் பதவியை பெற்று செயலாற்றி வந்தது. 

இதனடிப்படையில் மஇகாவிடமிருந்து பெறப்பட்ட பெராங், பாசீர் பாஞ்சாங், ஊத்தாங் மெலிந்தாங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு களமிறங்கும் வகையில் திரும்ப மஇகாவிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.

அங்கு ம இகா தனது வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெற்று மாநில அரசில் இடம்பெறும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று டத்தோ இளங்கோ கூறினார்.

No comments:

Post a Comment