Wednesday, 11 March 2020

துரோகிகளை களையெடுக்குமா ப.கூட்டணி தலைமைத்துவம்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மக்களின் அதிகாரத்தில் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 'துரோகிகளின்' சதிராட்டத்தாலேயே வீழ்த்தப்பட்டுள்ளது.

2018 மே 18ஆம் பெருவாரியான வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு நாட்டை ஆளும் அதிகாரத்தை பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்திடம் ஒப்படைத்தனர்,

ஆனால் பதவி மோகம், கட்சி தாவல், துரோகச் செயல் போன்ற நன்றி கெட்ட குணங்களாலேயே 21 மாத கால ஆட்சியில் பக்காத்தான் கூட்டணி வீழ்த்தப்பட்டது.

'அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது' எதிரியும் கிடையாது' என்பதற்கு தற்போதைய அரசியல் குளறுபடிகளே சான்றாக உள்ளன. யாரை தூற்றி, அவமானப்படுத்தி மக்களிடம் நஞ்சை விதைப்பதை போல் எதிரணியினரை தரம் தாழ்ந்து விமர்சித்து விட்டு இன்று பதவி சுகத்திற்காக அதே தரப்பினருடன் கைகோர்த்துள்ள இன்றைய தலைமைத்துவாதிகளை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

பக்காத்தான் ஹராப்பா கூட்டணி தற்போது இடம்பெற்றுள்ள கெ அடிலான், ஜசெக, அமானா ஆகிய கட்சிகள் தங்களுக்கு மத்தியிலே உலாவி கொண்டிருக்கும் 'கறுப்பு ஆடுகளை' களையெடுக்க வேண்டிய கட்டாய சூழலில் தள்ளப்பட்டுள்ளன.

துரோகத்தால் வீழ்த்தப்பட்டு கிடப்பது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அதிகாரம் மட்டுமல்ல; மலேசியர்கள் காண துடித்த பெரும் கனவும் தான்.

தற்போது அமைந்துள்ள தேசிய கூட்டணியை வீழ்த்த முற்படும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் முதலில் தங்களை சுற்றியுள்ள துரோகிகளை களியெடுக்க வேண்டியது அவசியமாகும்.

துரோகிகளை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு போராடினாலும் வீழ்ச்சி அடைவது அவர்களாகவே தான் இருப்பார்கள்.
அடிமட்டம் வரை பாய்ந்துள்ள துரோகிகளை களையெடுக்கப்படாத வரை பிகேஆர் கட்சிக்கு டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, ஜசெகவுக்கு ஆதி.சிவசுப்பிரமணியம், அமானாவுக்கு ஹஸ்னுல் ஸுல்கர்னைன் போன்றோர் உருவெடுத்துக் கொண்டுதான் இருப்பர்.

துரோகிகளை ஒழிக்காதவரை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடம் ஆட்சியை தூக்கிக் கொடுத்தாலும் அதனை கவிழ்க்க சில புல்லுருவிகள் வந்துக் கொண்டுதான் இருப்பர்.

No comments:

Post a Comment