Tuesday, 17 March 2020

மலேசியாவில் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
உயிர்கொல்லி நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மலேசியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பிப்ரவரி 26ஆம் தேதி வரை இந்த வைரஸ் தொற்றுக்கு 22 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி இந்த எண்ணிக்கை மளமளவென உயர்ந்து தற்போது 428-ஐ தொட்டுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய இந்த உயிர்கொல்லி நோய் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியுள்ள நிலையில் ஆசியாவிலேயே அதிக பாதிப்புக்குள்ளான நாடாக மலேசியா உருமாறியுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் சிங்கப்பூர் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக வகைப்படுத்தப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் மலேசியா படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள இடங்களாக சிலாங்கூரும்  கோலாலம்பூரும் முதன்மை வகிக்கின்றன. அதிகமான மக்கள் கூடும் பொது இடங்களையும் பொது நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவிட்- 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசாங்கம் வலியுறுத்தும் நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.


No comments:

Post a Comment