Friday 21 February 2020

மாட்டுப்பண்ணை உடைபட்டதை இன விவகாரமாக மாற்ற வேண்டாம் - கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
கிள்ளான் பண்டார் பொட்டானிக்கில் இருந்த இந்தியருக்கு சொந்தமான மாட்டுப் பண்ணை அகற்றப்பட்ட விவகாரத்தை யாரும் இன விவகாரமாக மாற்ற முயல வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
இந்த மாட்டுப் பண்ணை அமைந்திருந்த நிலம் சீன பள்ளிவாசலை கட்டுவதற்கு 2003இல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலத்தில் அத்துமீறி மாட்டுப்பண்ணை அமைக்கப்பட்டதோடு அதன் அருகில் இருந்த 3 ஆலயங்களையும் சுற்றி வேலி தடுக்கப்பட்டது.

நிலத்தை கையகப்படுத்த நில உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தபோது 5 ஆண்டுகளாக தன்னை நாடி வராத தரப்பினர் தற்போது அனைத்தும் எல்லை மீறி போன சமயத்தில் தன் பெயரை களங்கமடையச் செய்வது ஏன்?

பல்வேறு இடங்களில் கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்த 7 பேருக்கு மாற்று நிலங்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது உடைபட்ட மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் நிலம் வழங்கப்பட்டது.

ஆனால் அரசாங்கத்தால் வழங்கப்படும் நிலம் ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் நில பட்டாவுடன் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை சம்பந்தப்பட்ட தரப்பினர் விதித்ததால் அவருக்கான நில ஒதுக்கீடு நிராகரிப்பட்டது. அந்த எழுவரில் 4 பேருக்கு மட்டுமே மாற்று நிலங்கள் வழங்கப்பட்டன.

இது மாட்டுப்பண்ணை உடைபட்ட சம்பவமாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர ஆலய உடைப்பு நடவடிக்கையாக மாற்றி இன பதற்றத்தை உருவாக்க வேண்டாம்.

தனிநபரின் சுயநல விருப்பு வெறுப்புக்காக இவ்விவகாரத்திற்கு இனவாத சாயம் பூச வேண்டாம் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.



No comments:

Post a Comment