Wednesday 15 January 2020

ஒன்றாம் படிவ, புகுமுக மாணவர்களுக்கு மித்ரா மூலம் கல்வி உதவிநிதி: பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா-
2020-ஆம் ஆண்டு கல்வித் தவணையில் சேர்ந்துள்ள முதலாம் படிவ  மற்றும் புகுமுக வகுப்பு மாணவர்களுக்கு தொடக்கக் கல்வி உதவி நிதி மித்ரா மூலம் வழங்கப்படுகிறது. இது, இடைநிலைப் பள்ளியில் சேர்ந்துள்ள இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் வெளிப்பாடு என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ‘மைகாசே’ அறவாரியத்தின் மூலம் 150 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டு வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பள்ளி உபகரணங்களை இதன்மூலம் வாங்கிக் கொள்ளலாம்.  இது, பெற்றோருக்கும் சற்று துணையாக அமையும்.

‘மைகாசே’ கட்டண முகப்பிடத்தைக் கொண்டுள்ள பேரங்காடிகளில் பள்ளிச் சீருடை, பள்ளிக் காலணி, விளையாட்டுக் காலணி,  விளையாட்டு உடை, பந்து துடுப்பு போன்ற விளையாட்டுக் கருவிகள், பேனா உள்ளிட்ட எழுதுபொருட்கள், குறிப்பேடு, பயிற்சி ஏடு, கால்குலேட்டர், வண்ணப் பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை  மாணவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இதன் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பேரங்காடிகளில் மை காசே கட்டண முகப்பிடங்கள் திறக்கப்பட்டு உள்ளன. தவிர, மை காசே பற்றுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் தமிழ்ப் பள்ளிகளிலும் கட்டண முகப்பிட விவரம் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம்-தொழில்நுட்பம்-முன்னேற்றம்-பொன்.வேதமூர்த்தி பொங்கல் வாழ்த்து

புத்ராஜெயா-
மலேசிய மக்கள் அனைவருக்கும் மலேசிய முன்னேற்றைக் கட்சி(ஏம்.ஏ.பி.) சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை பண்பாட்டு விழாவாகவும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் திருநாளாகவும் அமைவதால், தேசிய அளவில் எல்லா மக்களிடமும் இந்தப் பண்டிகையின் தாக்கம் இன்றைய காலத்தில் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது தொழில்நுட்பத்தின் உச்சத்தை நாம் தொட்டாலும் விவசாயம்தான் மனித குலத்துக்கு அடிப்படை. அதனால், வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். அதேவேளை, இன்றைய இளைஞர்களும் அதிக இலாபம் தரும் வேளாண்தொழிலில் ஆர்வம் காட்டி, நாடு எதிர்நோக்கி இருக்கும் நான்காவது தொழில் புரட்சிக்கு ஏற்ப தங்களை மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அணியப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவரும் மண்பானையில் பொங்கல் வைத்து, மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும். அதன்வழி,  நம் பாரம்பரியத்தையும் கட்டிக்காத்த பெருமையும் நமக்கு கிடைக்கும்.

மொத்தத்தில் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, தேசிய உணர்வு, தொழில்நுட்ப சிந்தனை, உள்ளடக்க முன்னேற்றம் ஆகிய கூறுகளை மனதில் நிறுத்தி பொங்கல் நந்நாளைக்  கொண்டாடுவோம். அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றத்தை நோக்கி பயணிப்போம்- கணபதிராவ் வாழ்த்து

ஷா ஆலம்-

பொங்கல் உழவர் திருநாள் மட்டுமின்றி இந்துக்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உணர்த்துகின்ற பெருநாள். இந்த இனிய நாள் இந்துக்களின் வாழ்வில் ஏற்றத்தை கொண்டு வரும் திருநாளாக கொண்டாடி மகிழ்வோம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

பொங்கலுக்கு முன்னதாக கொண்டாடப்படும் போகி பண்டிகை பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறது. பழையன கழிதல் என்பது நமது இல்லங்களில் உள்ள பழைய பொருட்களை குறிப்பிடுவதல்ல. நமது எண்ணத்திலும் சிந்தனையிலும் பழைய சித்தாந்தங்களும் எதிர்மறையான எண்ணங்களை விலக்கி ஆக்ககரமான சிந்தனையும் தெளிவும் பெற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


சாதிக்க துடிக்கும் ஒவ்வோரு மனிதனுக்கான ஒரு பொன் விழா. பால் பொங்குவதுப்போல் எண்ணங்கள் பொங்கி, சிந்தனைகள் பொங்கி வெற்றி என்னும் பொங்கலை அனைவரும் இணைந்து பகிர்ந்து உண்போம்..

நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்துக்கொண்டு இருக்கின்றது,நாளுக்கு நாள் நாடும் மாற்றம் காண்கின்றது.நாமும் மாற்றங்களை நோக்கி பயணிப்போம். கல்வி,பொருளாதாரம் இந்த இரண்டும் நம் இரு கண்களை போல் நினைத்து வாழ்வில் வெற்றி பெற உழைத்திடுவோம் என்று பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கணபதிராவ் குறிப்பிட்டார்.



பொங்கல் பண்டிகை இஸ்லாமியர்களுக்கு ‘ஹராம்’ ஆனதா?

ரா.தங்கமணி


கோலாலம்பூர்-
இந்தியர்களின் பெருநாள் கொண்டாட்டங்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை முஸ்லீம்களுக்கு ‘ஹராம்’ ஆனது என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.
நாளை 15ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து வழிபாடும் திருநாளாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை இந்துக்களின் சமயப் பண்டிகை என்பதை காட்டிலும் உழவர்களின் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது..

அனைத்து இன மக்களிடையேயும் புரிந்துணர்வு அடிப்படையில் கடந்த காலங்களில் அனைத்து இன மக்களிடையேயும் ஒற்றுமையை வளர்த்து வந்த பொங்கல் பண்டிகைக்கு ‘இனவாத’ சாயம் பூசியுள்ள கல்வி அமைச்சின் நடவடிக்கையை பலரும் சாடி வருகின்றனர்.

பள்ளிகளில் கொண்டாடப்படும் பொங்கல் கொண்டாட்டங்கள் முஸ்லீம் பணியாளர்கள் பங்கெடுக்கக்கூடாது எனவும் அது ‘ ஹராம்’ ஆனது எனவும்  கூறி மாநில கல்வி இலாகாவின் இயக்குனர்களுக்கு  வெளியிடப்பட்டுள்ள் அறிக்கை கூறப்பட்டுள்ளது.

ஒற்றுமையை வளர்க்க வேண்டிய பள்ளிகளிலேயே இனவாதம் கொண்டு பிரிவினையை ஏற்படுத்த முயலும் கல்வி அமைச்சின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது எனவும்   ‘ஹராம்’ என சொல்வதற்கு பொங்கல் மாமிச இறைச்சியை கொண்டு செய்யப்பட்டல்ல; மாறாக பாலில் செய்யப்படும் பொங்கலே ஹராம் என்பதா? என பலர் கல்வி அமைச்சின் நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.


Sunday 5 January 2020

ஜாவி அமலாக்கத்திற்கு எதிராக பெற்றோர்கள் அணி திரள வேண்டும்

ஷா ஆலம்-
தாய்மொழிப் பள்ளிகளில் அமல்படுத்தப்படவுள்ள ஜாவி மொழி பாடத்திட்டத்தை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று ஸ்ரீமூடா வட்டார இந்திய சமூகத் தலைவர் பத்மநாதன் வலியுறுத்தினார்.
நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்திற்கு இந்திய, சீன சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜாவி மொழி அமலாக்கத்தை கடுமையாக எதிர்க்கும் வண்ணம் பெற்றோரும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் அதற்கு எதிராட நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி திணிக்கப்படுவதற்கு எதிராக பெற்றோர்கள் அணிவகுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில சமூக மேம்பாட்டு இயக்கம், கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' நிகழ்ச்சியின் வழி 50 சிறார்களுக்கு புத்தகப்பை, புத்தகங்கள் ஆகியவற்றை பத்மநாதன் வழங்கினார்.
இந்த நிகழ்வில் இந்திய சமூகத் தலைவர் பொன்.சந்திரன்,  மைசெல் அதிகாரிகள் திருமதி சாந்தா, ரகுபதி, கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி அலுவலர் ரா.தங்கமணி  ஆகியோர் கலந்து கொண்டு சிறார்களுக்கு புத்தகப்பைகளை வழங்கினர்.

Friday 3 January 2020

தற்காலிக கல்வி அமைச்சராக துன் மகாதீர்

கோலாலம்பூர்-
கல்வி அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் மஸ்லீ மாலேக் விலகியதை அடுத்து அப்பொறுப்புக்கு பிரதமர் துன் மகாதீர் தற்காலிகமாக பதவியேற்கிறார்.

ஜாவி உட்பட பல்வேறு விவகாரங்களில் அரசியல் தலையீடு அதிகரித்ததை தொடர்ந்து கல்வி அமைச்சர் பதவியிலிருந்து மஸ்லீ மாலேக் இன்று விலகினார்.

அவரின் பதவி விலகல் நாளை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில் கல்வி அமைச்சர் பொறுப்பை துன் மகாதீரே ஏற்கிறார்.


கல்வி அமைச்சர் பதவியிலிருந்து மஸ்லீ மாலேக் அதிரடி விலகல்

கோலாலம்பூர்-
தாம் வகித்து வந்த கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக டாக்டர் மஸ்லீ மாலேக் அறிவித்தார்.
தமது பதவி விலகலுக்கு முன்னதாக பிரதமர் துன் மகாதீர் முகம்மதுவை சந்தித்து பதவி விலகல் குறித்து கலந்தாலோசித்ததாகவும் தமது முடிவை அவர் ஏற்று கொண்டதாகவும் மஸ்லீ தெரிவித்தார்.

மஸ்லீயின் பதவி விலகலுக்கு பின்னர் கல்வி அமைச்சர் பொறுப்பை துன் மகாதீரே கூடுதலாக கவனிக்க உள்ளார்.

புதிய கல்வி அமைச்சர் வெகு விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday 2 January 2020

மாறாத தலைவர்கள்; முன்னேறாத நாடு- 2020 இலக்கை வெற்றி கொண்டதா மலேசியா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும் இனிமையான தருணங்கள், துயரங்கள் ஆகியவற்றை கொடுத்து 2020ஆம் ஆண்டுக்கு வழிவிட்டு நம்மிடமிருந்து விடை பெற்றது 2019 ஆண்டு.
2020ஆம் ஆண்டு யாருக்கு, எந்த நாட்டுக்கு முக்கியமானதோ இல்லையோ மலேசியாவுக்கு மிக முக்கியமான ஆண்டாகும்.

2020 இலக்கு (வவாசான் 2020) எனும் கொள்கையை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்து செயல்பட தொடங்கிய நாடு மலேசியா.

உலக நாடுகளின் தர வரிசையில் வளர்ச்சி கண்ட நாடாக இடம்பெற முன்னெடுக்கப்பட்ட இலக்குதான் 2020.

முதன்முறையாக பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர் முகமட் வகுத்த இத்திட்டம் இன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகிக்கும் அவரின் கரங்களிலேயே தவழ்ந்து கிடக்கிறது.
எந்த இலக்கை அடைவதற்காக பெரும்பாடு பட்டாரோ அதன் வெற்றியை நுகர முடியாமல் தோல்வி கண்ட மனிதராகவே துன் மகாதீர் 2020ஆம் ஆண்டை வரவேற்றுள்ளார்.

 அதற்கு உதாரணமே அவர் வகுத்துள்ள 2030 இலக்கு (வவாசான் 2030).

துன் மகாதீர் வகுத்த 2020 இலக்கு வெற்றியடையாமல் தோல்வியை தழுவியதற்கு காரணம் நாட்டை நிர்வகித்த தலைவர்கள் முன்னெடுத்த 'முட்டாள்தனமான' கொள்கைகளும் முரண்பாடான செயலாக்கங்களுமே ஆகும்.

பல இன மக்களை கொண்ட நாடு, சுபிட்சமான நாடு, பல இன மக்களிடையே ஒற்றுமை, மேலோங்கும் நாடு என சப்பை காரணம் காரணம் காட்டி கொண்டிருக்கும் நாட்டில் நலைவவிரித்தாடும் இனவாத கொள்கைகளும் இனம், மத ரீதியிலான ஒடுக்கல் முறைகளும் தொடரும் வளர்ச்சி கண்ட நாடு எனும் கொள்கை 'மலேசியாவுக்கு' வெறும் கனவு மட்டுமே.

நாட்டின் வளர்ச்சி பற்றி பேசும்போது மட்டும் 'மலேசியர்' என்ற சித்தாந்தமும் செயல்முறை திட்டங்கள் எனும்போது மலாய்க்காரர், சீனர், இந்தியர், பூர்வக்குடி, ஈபானியர், கடஸான் என இன ரீதியிலான பிரித்தாலும் கொள்கை கடைபிடிக்கும் வரை 2020 அல்ல, 2030 அல்ல 2040, 2050 என 2100 வந்தாலும் மலேசியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
இனவாத ஒடுக்கல் முறையை தங்களின் ஆயுதங்களாக பயன்படுத்தி கொள்ளும் தலைவர்கள் இருக்கும் வரை இது சாத்தியமாகாது.

அம்னோ, மசீச, மஇகா  என்றுஇன ரீதியிலான கட்சிகள கொண்ட தேசிய முன்னணியை புறக்கணித்து அனைத்து இனத்தவர்களையும் கொண்ட பல இன கட்சியை தேர்வு செய்யுங்கள், அப்போதுதான் மலேசியர்களின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என கூறி வாக்குகளை வாங்கி இன்று ஆட்சி கட்டிலில அமர்ந்துள்ள பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தான் எப்போதும் இல்லாத அளவுக்கு இனவாத கருத்து மோதல்கள் மேலோங்கியுள்ளன.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது செங்கலையம் மணலையும் கொட்டி எழுப்பப்பட்ட வானுயர்ந்த கட்டடங்களால் மட்டும் முழுமை பெற்று விடாது. சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதார, பொருளாதார சூழல் மேம்பாடு கண்டிருப்பதே முன்னேற்றத்தின் அளவுகோலாகும்

இனவாத அரசியலை தூக்கி போட்டு விட்டு மலேசியர் எனும் ரீதியில் அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் அரசாங்கத்தாலேயே 2030 இலக்கு சாத்தியதாகும்.

தலைவல்கள் மாறாத வரை மக்களின் தலையெழுத்தை யாராலும் சரியாக எழுத முடியாது. மக்களின் இன்றைய தலையெழுத்து திருத்தப்படாத வரை நாடு முன்னேறப்போவதில்லை; அதனூடே நாமும் வளரப்போவதில்லை.