Monday, 4 November 2019

மஇகா மீண்டும் எழுச்சி பெறும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை

கோ.பத்மஜோதி
படங்கள்: கினேஷ் ஜி

கோலாலம்பூர்-
மஇகா என்றுமே இந்தியர் நலன் காக்கும் கட்சி. இந்தியர்களுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சி இந்தியர் நலன் சார்ந்த எந்த விவகாரத்திலும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியர்களை காக்கும் கட்சியாக மஇகா இருப்பதால்தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்தை நாம் ஒருபோதும் ஓரங்கட்டியதில்லை.

கடந்த 60 ஆண்டுகளாக மஇகாவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்த இந்திய சமுதாயத்திற்கு நன்றி கூறிக் கொள்ளும் கடப்பாடாகவே இந்த தீபாவளி உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மஇகாவை புறக்கணித்திருந்தாலும்  மஇகா ஒருபோதும் இந்தியர்களை கைவிட்டதில்லை. இந்தியர் நலன் காக்கும் அரணாகவே மஇகா எப்போதும் செயல்படும்.  இந்தியர்களின் மிகப் பெரிய ஆதரவோடு மஇகா மீண்டும் எழுச்சி பெறும் காலம் வெகு தூரம் இல்லை என்று மஇகாவின் தீபாவளி உபசரிப்பு நிகழ்வில் செய்தியாளர் சந்திப்பின்போது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.


இன்றைய பக்காத்தான் ஹராப்பானின் பலவீனத்தை இந்தியர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ம இகாவை முன்பு கடுமையாக சாடிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களின் 'மெளனம்' இந்தியர்களிடையே அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் பலவீனமே மஇகா பலம் பெறுவதற்கு அடிகோலாக அமைந்துள்ளது. இந்தியர்களின் நம்பிக்கை பெற்ற கட்சியாக மஇகா மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்று மேலவை தலைவருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு, மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், அம்னோ தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, மசீச தலைவர் வீ கா சியோங், மேலவை துணை தலைவர், மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சரவணன், உதவித் தலைவர்கள், டத்தோ டி.மோகன், டத்தோ தோ.முருகையா, டத்தோ சி.சிவராஜ் உட்பட மஇகா மாநில, தொகுதி, கிளைத் தலைவர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும்  திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment