Sunday 24 November 2019

மலேசிய அரசியலை புரட்டி போட்டது 'ஹிண்ட்ராஃப்' மட்டுமே - கணபதிராவ்

ரா.தங்கமணி

கிள்ளான்-
மலேசிய அரசியல் புரட்டி போட்டது இந்தியர்களின் உரிமை போராட்டமான 'ஹிண்ட்ராஃப்' மட்டுமே. ஆனால் இந்தியர்களின் போராட்டத்தில் இன்று பலர் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் தோற்றுனர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்கு முன்னர் டத்தோஸ்ரீ அன்வாரை உள்ளடக்கிய 'ரீஃபோர்மாசி' (Reformasi), தேர்தல் சீர்திருத்த இயக்கமான 'பெர்சே' போராட்டம் ஆகியவை நடத்தப்பட்டன.

ஆனால் இந்த இரு போராட்டங்களை காட்டிலும் 'ஹிண்ட்ராஃப்' போராட்டமே நாட்டின் அரசியல் தன்மையை ஆட்டம் காணச் செய்தது.
2007 நவம்பர் 25ஆம் தேதி கோலாலம்பூர் வீதியில் இந்தியர் பட்டாளம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக எதிரொலித்ததோடு அடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி அரசை ஆட்டி வைத்தது.

பல மாநிலங்கள் மக்கள் கூட்டணி வசமான நிலையில் தேசிய முன்னணி மக்களவையில் மூன்றில் இரு பெரும்பான்மையை இழக்கச் செய்தது.

இன்றைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆளும் அதிகாரத்தை பெறுவதற்கும் ஹிண்ட்ராஃபின் போராட்டமே  அடித்தளம் ஆகும்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்தியர்களின் நலனை ஓரங்கட்டி விட்டு மதவாதத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.

மீண்டும் இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டிட இந்தியர்களிடையே ஒற்றுமை நிலைநாட்டப்படுவது அவசியமாகும் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் 12ஆம் ஆண்டு நிறைவுநாள் கூட்டத்தில் உரையாற்றுகையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment