Tuesday 19 November 2019

அரசாங்கத்தின் தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டாம்- கணபதிராவ்

ரா.தங்கமணி


ஷா ஆலம்-
இனியும் அரசாங்கம் செய்யும் தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரித்துக் கொண்டிருக்காமல் தவறு சுட்டி காட்டுவதற்கு ஆளும் கூட்டணியின் மக்கள் பிரதிநிதிகள் துணிய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பக்காத்தான் கூட்டணி மக்கள கொண்டிருந்த நம்பிக்கையை  பூர்த்தி செய்யாத காரணத்தினாலேயே தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளில் நாம் நிராகரிக்கப்பட்டிருக்கிறோம்.

கடந்த பொதுத் தேர்தலில் இன பாகுபாடு, வயது பின்னணி என எதுவும் பாராமல் ஒட்டுமொத்த மலேசியர்களும் பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக அணி திரண்டனர்.
தங்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் பக்காத்தான் கூட்டணியை ஆதரிக்காத நிலையில் மலாய்க்காரர் அல்லாதவர்களே பக்காத்தானை முழுமையாக ஆதரித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தனர்.

ஆனால், ஆட்சியை கைப்பற்றிய பின்னர் மலாய்க்காரர் உரிமையை தற்காக்க தன்மான மாநாடு, ஜாவி எழுத்து திணிப்பு, சர்ச்சைக்குரிய சமய போதகருக்கு  விருந்துபசரிப்புடன் பலத்த பாதுகாப்பு என்று மலாய்க்காரர் உரிமையை பற்றி பேசும் அதே வேளையில் மலாய்க்காரர் அல்லாதோரின் நலன் காக்க தவறுகிறோம்.

உயிர்ப்புடன் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டி ஆளும் கூட்டணியைச் சேர்ந்த ஆட்சிக்குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உட்பட 12 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிருப்தி அலையாக உருவெடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை காரணம் காட்டி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டோம். ஆட்சியை கைப்பற்றினால் 100 நாட்களில் குடியுரிமை, அடையாள அட்டை இல்லாத இந்தியர்களுக்கு அவை வழங்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?

பல்வேறு தவறுகள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் மக்கள் பக்காத்தான் கூட்டணி மீது கொண்டிருந்த நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது என்ற உண்மையை ஆளும் தலைவர்கள் உணர வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கம் செய்யும் தவறுகளை இனியும் கண்மூடித்தனமாக ஆதரிக்கக்கூடாது. தேவை ஏற்பட்டால் அரசாங்கத்தின் தவறுகளை துணிந்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று பிரதமர் மகாதீர் கூறியுள்ளார். இனி அவரின் கூற்றையே தாம் பின்பற்றப் போவதாக கணபதிராவ் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment