Friday, 11 October 2019

பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள் சரியாக இருப்பார்கள்- சரஸ்வதி நாராயணசாமி

ஷா ஆலம்-
பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள் சரியாக இருப்பார்கள் என்று தாமான் ஶ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியின் முதல்வர் சரஸ்வதி நாராயணசாமி பெற்றோர்களிடத்தில் அறிவுறுத்தினார்.
அப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விஸ்வரூப வெற்றிக்கு நாமே படிகற்கள்' என்னும் விழிப்புணர்வு கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசிய அவர், எந்த குழந்தையும் நல்ல குழந்தைத்தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்னும் பாடல் வரிகளை சுட்டிகாட்டி பெற்றோரின் அரவணைப்பிலும் அன்பினாலுமே மாணவர்களை சரியானவர்களாக எங்களால் வழிநடத்த முடியும், அன்பு கிடைக்காத பிள்ளைகளே தவறான பாதையில் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துக்கொண்ட இந்த கருத்தரங்கில் ஒரு மாணவன் தவறு செய்தால் அவனுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதே வேளை அம்மாணவனை பள்ளி ஆலோசகர்களிடம் அனுப்பி அம்மாணவனின் பிரச்சினை என்னவென்று கேட்டறிந்து அதனை களைய கவுன்சிலின் ஆசிரியர்கள் முன்னுக்கு வர வேண்டும்.பள்ளிகளில் 500 மாணவர்களுக்கு 1 கவுனிசிலின் ஆசிரியர் என்னும் எண்ணிக்கை மாறி அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தன் கருத்தை மேலும் கூறினார்.

1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் 68 சதவிதம் இந்திய மாணவர்களே,கட்டொழுங்கு பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை எதிர் நோக்கி வந்து உள்ளனர். தான் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே அப்பிரச்சினைகளை கலைந்திருப்பதுடன் மேலும் அவர்களை கல்வி தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களாக உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராக கலந்துக்கொண்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் புக்கிட் கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதி ராவின் சிறப்பு அதிகாரி ஆனந்தன் பேசுகையில், மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதுப்போல் பெற்றோருக்கு பிறகு குருத்தான் எல்லாமே ஆக மாணவர்கள் ஆசிரியர்களை மதியுங்கள். அவர்களின் வழிகாட்டுதலின் படி செல்லுங்கள். வாழ்க்கையில் பல வெற்றிகளை உங்களால் குவிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

விழிப்புணர்வு கருத்தரங்கை வழிநடத்திய முன்னாள் போலீஸ் ஆணையர் டத்தோ பராம் பேசுகையில், என்னுடைய 40 வருட போலீஸ் சேவையில் நான் பார்த்த அதிகமாக குற்றச் செயல்களில் ஈடுபடுவது இந்தியர்களே! படிக்கும் பிள்ளைகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் அதற்கு காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையில் குறைபாடுத்தான் என்றும் அவர் தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

அவரை தொடர்ந்து பேசிய குண்டர் கும்பல்  துடைத்தொழிப்பு பிரிவு தலைவர் ஏ.எஸ்.பி. ராஜன், குண்டல் கும்பலில் உறுப்பினர் என்பதாலும் சில குற்றச் செயல்களில் ஈடுப்பட்டதினாலும் எத்தனையோ பள்ளி மாணவர்களை நான் கைது செய்துள்ளேன். அப்பொழுதெல்லாம் மனம் வலிக்கும் என்ன செய்வது கடமையை செய்தாக வேண்டும் என்பதால் கைது செய்வேன்,கைதுக்கு பிறகு விசாரனை மேற்கொண்டால் குடும்பத்தில் சரியான அனுகுமுறைகளும் பாசமும் அன்பும் இல்லாதது காரணமாக தெரிய வரும் என்றும் அவர் தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
அப்பள்ளியை சேர்ந்த சிறந்த கட்டொழுங்கு மாணவர்களுக்கு டத்தோ பராம் நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கினார். அதேவேளை இவ்வாண்டு எஸ்.பி,எம் மில் சிறந்த அடைவு நிலையை எடுக்க உள்ள மாணவர்களுக்கு சிறப்பு நற்சான்றிதழகளையும் எடுத்து வழங்கி கொளரவித்தார்.

No comments:

Post a Comment