Wednesday, 2 October 2019

பல இன மக்களுடன் சகிப்புத்தன்மையை மாணவர்களுக்கு உணர்த்திட வேண்டும்

கிள்ளான் -
பல இன மக்களை கொண்டுள்ள மலேசியாவில் அனைத்து இன மக்களுடன் ஒற்றுமையுடனும் சகிப்புத்தன்மையுடன் இன்றைய மாணவர்கள் ஒன்றிணைந்து வாழ்வது அவசியமாகிறது.
அதன் அடிப்படையில் அண்மையில் கொண்டாடப்பட்ட நாட்டின் 62ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சுதந்திர தின பேரணியில் பல இன மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மாணவர்கள் வேடமணிந்து தங்களின் நாட்டுப் பற்றை புலப்படுத்தினர் என்று காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் என்.சரஸ்வதி தெரிவித்தார்.

அனைத்து மக்களுடனும் ஒற்றுமையுடன் வாழ்வதை சிறு வயதிலேயே மாணவர்களுக்கு ஊக்குவிக்கப்பட்டால் வருங்காலத்தில் நாட்டில் வளர்ச்சியில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேலோங்கச் செய்ய முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அண்மையில் இப்பள்ளியின் புறப்பாட நடவடிகையின் ஓர் அங்கமாக சுதந்திர தின பேரணி நிகழ்வு நடத்தப்பட்டது.

காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் தொடங்கிய இப்பேரணி மேரு தேசியப்பள்ளி, பின் ஹுவா 2 சீனப்பள்ளி, மேரு சாலை தமிழ்ப்பள்ளி ஆகிவற்றுக்கும் தொடர்ந்தது.
காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் இந்த முயற்சியை  மற்ற பள்ளி தலைமையாசிரியர்களும் வெகுவாக பாராட்டினர்.
இந்த சுதந்திர தின நிகழ்வில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment