Wednesday, 7 August 2019

அரபு சித்திர மொழி திணிக்க வேண்டிய அவசியம் என்ன? மணிமாறன்

ரா.தங்கமணி 

ஷா ஆலம்-
தமிழ், சீனப்பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு தேசிய மொழி பாடத்திட்டத்தில் அரபு சித்திர மொழி (Tulisan Khat) இணைக்கப்படுவதற்கு நடப்பு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இவ்வளவு மும்முரம் காட்டுவது வருத்தத்திற்குரியதாக உள்ளது என்று சிலாங்கூர் மாநில மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைவர் மணிமாறன் முனுசாமி குறிப்பிட்டார்.  

அரபு சித்திர மொழி எழுத்துகளை முஸ்லீம் மாணவர்கள் பயில்வது அவர்களுக்கு பொருத்துமானதாக இருக்கலாம். ஆனால் தமிழ், சீனப்பள்ளி மாணவர்களிடையே அரபு சித்திர மொழியை வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

கல்வி அமைச்சு கொண்டு வந்துள்ள இத்திட்டத்திற்கு எப்போது ஆய்வு நடத்தினார்கள், யாருடன் கலந்து பேசினார்கள்,  இத்திட்டத்திற்கு யார் ஆதரவு கொடுத்தது? போன்ற பல கேள்விகள் இன்று இந்திய சமுதாயத்தில் எழுந்துள்ளது.

சிறு குழுவினர் மட்டுமே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பிரதமட் துன் மகாதீர் கூறும் நிலையில், அரபு சித்திர மொழி தமிழ், சீனப்பள்ளி மாணவர்களிடயே திணிப்பதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இந்தியர்களை சார்ந்துள்ள பொது இயக்கங்கள் இவ்விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்?
சமயம், சமூகம் சார்ந்த பொது அமைப்புகள் மட்டுமின்றி பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு குரல் கொடுக்காமல் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே திணிக்கப்படும் இந்த அரபு சித்திர மொழியினால் நாளடைவில் தமிழ்ப்பள்ளிகள் பணியாற்ற இந்தியர் அல்லாத ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். பெரும்பாலான இந்திய ஆசிரியர்கள் வேலை இல்லா திண்டாட்டத்தை எதிர்நோக்க நேரிடும். அதோடு மெல்ல மெல்ல இஸ்லாமிய மயக் கொள்கை இந்திய மாணவர்களிடையே பதிவு செய்யப்படும் அபாயம் உள்ளதையும் இன்றைய பெற்றோர் உணர்ந்து விழித்துக் கொள்ள வேண்டும்.

இத்திட்டத்திற்கு இப்போதே எதிர்ப்புக் குரல் கொடுக்க தவறுமேயானால் பின்னாளில் வெகுவாக பாதிக்கப்படப் போவது இந்திய சமுதாயமே ஆகும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று மணிமாறன் வலியுறுத்தினார்.  

No comments:

Post a Comment