கோலாலம்பூர்-
அடுத்தாண்டு முதல் 4ஆம் ஆண்டு
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘காட்’ எனப்படும் அரேபிய சித்திர மொழி பயிற்சி
திட்டத்தில் ஆசிரியர்களை ‘பலிகடா’வாக்க கல்வி அமைச்சு முனைந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
தாய்மொழிப் பள்ளிகள் உட்பட
அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ‘காட்’ சித்திர மொழி பயிற்சிக்கு
தமிழ், சீனப் பள்ளிகளின் பிரதிநிதிகளும் பொது அமைப்புகளும் பெற்றோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக கடுமையான
விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் வெளியிட்ட
அறிக்கையில், இவ்விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது எனவும் 3 பக்கங்களில்
மட்டுமே இப்பயிற்சி இடம்பெறும் எனவும் கூறப்பட்டது.
அதோடு, தேர்வு பாடமாக வகைப்படுத்தப்பட்டுள்ள
‘காட்’ பயிற்சி திட்டத்தை எவ்வாறு அமல்படுத்துவது என்பதை ஆசிரியர்களே முடிவு செய்து
கொள்ளலாம் என கூறப்படுகிறது.
‘காட்’ அமலாக்கம் செய்யப்படுவது
தொடர்பிலான முடிவு ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது ‘கழுவுற மீனில் நழுவுற மீனாக’
கல்வி அமைச்சின் நடவடிக்கை அமைந்துள்ளது.
'காட்' விவகாரத்தில் ஆசிரியர்களிடம்
வழங்கப்பட்டாலும் கல்வி அமைச்சு போடும் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே ஆசிரியர்கள்
விளங்குவர். கல்வி அமைச்சின் உத்தரவை மீறி செயல்பட விரும்பாத ஆசிரியர்கள் நிச்சயம்
மாணவர்கள் ‘காட்’ சித்திர மொழி பயிற்சியை திணிக்கவே முற்படுவர். அதையும் தங்களது கடமைகளில்
ஒன்றாகவே செய்ய முற்படுவர்.
ஆசிரியர்கள் கட்டாயமாக மாணவர்களிடம்
‘காட்’ பயிற்சி திட்டத்தை போதிக்கும்போது அங்கு ஆசிரியருக்கும் பெற்றோருக்குமிடையே
வாக்குவாதங்கள் எழலாம். பெற்றோரின் வாதத்தை விட கல்வி அமைச்சின் உத்தரவையே பின்பற்றபோகும்
ஆசிரியர்கள் ஒரு தர்ம சங்கடமான சூழலை எதிர்கொள்ளும் நிலையில் இந்த மனகசப்பு மாணவர்கள்
மீது திணிக்கப்படுவதற்கு வெகுநாட்கள் ஆகாது.
மாணவரை அடிப்பது குறித்து
பெற்றோர் வாக்குவாதம் புரிந்தாலே அம்மாணவனை ஓரம்கட்டும் சில ஆசிரியர்களும் இருக்கின்ற
நிலையில் காட் விவகாரத்தில் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதம் புரிந்தால் அது
மாணவனையே பெரிதும் பாதிக்கும்.
‘காட்’ சித்திர மொழி விவகாரத்தில்
சமூக அமைப்புகள், பெற்றோர் ஆகியோரிடத்திலிருந்து வந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல்
ஆசிரியரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டாலும் அவர்களை ஆட்டுவிக்கும் சக்தியாக
கல்வி அமைச்சே திகழும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் கல்வி
அமைச்சு ஆசிரியர்களை ‘பலிகடா’ ஆக்கி வேடிக்கை பார்க்கிறது கல்வி அமைச்சு.
No comments:
Post a Comment