Tuesday, 13 August 2019

'காட்' அமலாக்கத்தின் விளைவுகளை ஆராய்வீர்- மணிமாறன் வலியுறுத்து

ஷா ஆலம்-
'காட்' எனப்படும் அரேபிய சித்திர மொழி அமலாக்கத்தினால் இப்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால்  ஜசெக 40% ஆதரவை இழக்கக்கூடும் என்று கூறிய ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் கூற்றை பக்காத்தான் ஹராப்பான் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று மலேசிய  இந்தியர் குரல் இயக்கத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மணிமாறன் வலியுறுத்தினார்.
தாய்மொழிப்பள்ளிகளில் 'காட்' பயிற்சி திட்டம் அமல்படுத்தப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு முஸ்லீம் அல்லாதோரிடையே மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சரின் இந்த விபரீத முடிவினால் சீனர்கள், இந்தியர்களின் வெறுப்புணர்வு ஜசெக பிரதிநிதிகளின் மீது ஏற்படுவதால் அது ஜசெகவின் வெற்றியை வெகுவாக பாதிக்கச் செய்கிறது என்ற லிம் கிட் சியாங்கின் கூற்று நடைமுறைக்கு ஏற்புடையதாகும்.

முஸ்லீம் அல்லாதோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் கருத்தில் கொள்வது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.

அதோடு, 'காட்' சித்திர மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி வாரியக்குழு ஆகியவை கண்டனப் பதாகைகளை தங்களது பள்ளிகளில் தொங்க விடச் செய்ய வேண்டும்.

அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பதை கல்வி அமைச்சு புரிந்து கொள்ளும் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment