ரா.தங்கமணி
ஷா ஆலம்-
சிறார் மதமாற்ற விவகாரத்தில் கூட்டரசு அரசியலமைப்பின் நடைமுறைகளை பின்பற்றுவதே போதுமானது. இவ்விவகாரத்தில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை திருத்தி அமைக்க அவசியம் இல்லை என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கம் வலியுறுத்தியது.
18 வயதுக்கு குறைவான சிறார்களை மதமாற்றம் செய்வதற்கு 'தாய் மற்றும் தந்தை' ஆகியோரின் அனுமதி தேவை என கூறும் சட்டவிதியை 'தாய் அல்லது தந்தை' என மாற்ற சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி முயற்சிக்கிறார்.
இத்தகைய நடவடிக்கை முஸ்லீம் அல்லாதோரிடையே சர்ச்சையாகியுள்ள நிலையில் இதற்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி பக்காத்தான் ஹராப்பான் மக்கள் பிரதிநிதிகளிடமும் கடும் ஆட்சேபம் எழுந்துள்ளது என்று அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
இன்றைய அரசியல் சூழலில் மத்திய, மாநில அரசுகள் பக்காத்தான் ஹராப்பான் வசமே உள்ளது. தேசிய கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டரசு அரசியலமைப்பின் சட்ட நடைமுறைகளை மாநில அரசு பின்பற்றினாலே போதுமானது.
சர்ச்சைகளை ஏற்படுத்தும் சட்டத் திருத்தங்களை அமல்படுத்துவதை காட்டிலும் அனைத்து இனத்தவரும் ஏற்றுக் கொண்டுள்ள கூட்டரசு அரசியலமைப்பு சட்டத் திட்டங்களே போதுமானதாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
சட்டமன்றக் கூட்டத்தில் மதமாற்ற சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்ற அமிருடின் சாரி அத்திட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கம் கேட்டுக் கொண்டது.
No comments:
Post a Comment