Wednesday, 31 July 2019

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இளைஞர் மரணம்

ஜோர்ஜ்டவுன் -
போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சுங்கைப்பட்டாணி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் கோபால் கிருஷ்ணன் த/பெ ராஜலிங்கம் மரணமடைந்தத சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த மே 12ஆம் தேதி பினாங்கில் கைது செய்யப்பட்ட கோபால் கிருஷ்ணன் பின்னர் சுங்கைப்பட்டாணி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்ட கோபால் கிருஷ்ணனை அவரது தாயார் திருமதி சக்தியும் காதலியும் சிறையில் சென்று சந்திக்கும்போதெல்லாம் பல்வேறு காரணங்களுக்காக சிறை வார்டன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவர் முறையிட்டுள்ளார் என்று செபெராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

கடந்த 24ஆம் தேதி சிறைத்துறையினரிடமிருந்து தொலைபேசி அழைப்பை பெற்ற திருமதி சக்தி, உடல்நலக் குறைவு காரணமாக கோபால் கிருஷ்ணன் சுங்கைப்பட்டாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடையும் நாள் வரை (ஜூலை 30) நினைவு திரும்பாமலே இருந்த கோபால் கிருஷ்ணன் உடலில் காயங்களும் இரு கைகளும் வீக்கம் கண்டிருந்ததாகவும் அவரை பார்த்த தாயாரும் காதலியும் கூறினர். இது குறித்து கேட்டபோது நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை வழங்கப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்னால் கோபால் கிருஷ்ணன் எவ்வித மருத்துவச் சிகிச்சைகளையும் கொண்டிருக்கவில்லை என்று தாயார் கூறியதாக டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

கோபால் கிருஷ்ணன் மரணம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மலேசிய தமிழர் குரல் இயக்கமும் தாமும் உதவிகளை வழங்கவிருப்பதாகவும் இம்மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் டேவிட் மார்ஷல் கூறினார்.

No comments:

Post a Comment