ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தில் செனட்டர் பொ.வேதமூர்த்தி அமைச்சராக பதவி வகிப்பதற்கு மலேசிய நண்பன் நாளிதழ் மிகப் பெரிய பங்கை வகித்தது. ஆனால் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேள்வி எழுப்பினால் கீழறுப்பு வேலை செய்வதாக குற்றஞ்சாட்டுவது சிறுபிள்ளைத்தனமானது என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
ஹிண்ட்ராஃப் காலம் தொட்டு தேமுவை மஇகாவையும் விமர்சித்து குறை சொல்லி அரசியல் நடத்திய உங்களின் (வேதமூர்த்தி) வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது மலேசிய நண்பன் நாளிதழ். உங்களின் குற்றச்சாட்டுகளை எல்லாம் முதல் பக்கத்தில் அச்சிட்டு சமுதாயத்தில் உங்களை ஹீரோவாக உருவாக்கி விட்டதற்கு மலேசிய நண்பனின் பங்கும் உண்டு.
அன்று மஇகாவையும் தேமுவையும் விமர்சித்தபோது தேவைபட்ட அந்நாளிதழ் இன்று உங்களை கேள்வி கேட்கும்போது கீழறுப்பு வேலை செய்வதாக குற்றஞ்சாட்டுவது நியாயமானதா?
இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள அமைச்சர் பொறுப்பில் உள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது விழும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை வழங்குவதை விட்டு நாளிதழ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம். உங்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட மலேசிய நண்பன் நாளிதழ் மீதே சீறி பாய வேண்டாம் என்று நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment