ஷா ஆலம்-
1980ஆம் ஆண்டுகளில் தோட்டத் துறைகளில் பெரு வளர்ச்சி கண்டிருந்த மலேசியா, ரப்பர், செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக திகழ்ந்தது. இன்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ள தோட்டத் துறைகளில் தங்களது ரத்தத்தை வியர்வை துளியாக சிந்திய இந்தியர்கள் உழைப்பு மறக்கடிப்படுவது துரதிர்ஷடமானது ஆகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
ரப்பர், செம்பனை தோட்டங்கள்
எல்லாம் அசுர வளர்ச்சி கண்டு அரசு சார்பு
நிறுவனங்களாக மாறும்போது அங்கு பணியாற்றிய இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பை
அங்கீகரிக்க மறுத்ததோடு அவர்களுக்கான அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய மறுத்து
விட்டன.
அதே வேளையில் தோட்டத்
துறையில் ஈடுபட்டிருந்த பிற இனத்தவர்களுக்கு ஃபெல்டா (FELDA), ஃபெல்க்ரா (FELCRA)
போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்
மூலம் அதிக விலைக்கு செம்பனை பழங்கள் விற்பனை செய்யப்பட்டதில் கிடைக்கப்பெற்ற
லாபத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரச் சூழல் மாற்றியமைக்கப்பட்டது. பள்ளிக்கூடம், வழிபாட்டுத் தலம், மின்சார,
குடிநீர் கட்டணம் போன்ற பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொன்டனர்.
ஆனால் பல ஆண்டுகளாக
வளர்ச்சி என்ற பெயரில் இந்தியர்கள் பெருமளவு
இடமாற்றம் செய்யப்பட்டனர். தோட்டங்கள் விற்பனை செய்யப்பட்டபோது இந்தியர்கள்
இங்கேயே தங்கியிருந்து புதிய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவதற்கு மாற்று
திட்டங்கள் வகுக்கப்படவில்லை.
இத்தோட்டங்களிலிருந்து இந்தியர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியேற்றப்பட்டதோடு அந்த
இடங்களை நிரப்ப இந்தோனேசியா, நேப்பாள், வங்காளதேசம், இந்தியா போன்ற நாடுகளைச்
சேர்ந்தவர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். முறையான வழிகாட்டுதல் இல்லாததால்
நாட்டின் விரைவான வளர்ச்சியில் இந்தியர்களின் தங்களின் நிலையான வாழ்வாதாரத்தை
இழந்தனர். நகர்ப்புற வறுமை, வேலை
வாய்ப்பின்மை, ஏழ்மையில் உழன்ற மன அழுத்தம் போன்றவை இன்னமும் தொடர்கதையாக
நீடிக்கின்றது.
எனவே, நிலையான வருமானம்,
சிறந்த வசதி வாய்ப்பு போன்றவை வழங்கப்பட்டால் தோட்டத் துறைகளில் பணியாற்ற இந்தியர்கள்
தயாராகவே உள்ளனர். 14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹரப்பானின் தேர்தல்
கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைபோல் ஃபெல்டா, ஃபெல்க்ரா போன்ற திட்டங்கள் இந்தியர்களுக்கும்
அறிமுகப்படுத்தப்பட வேண்டும் . இத்திட்டத்தின் மூலம் நிலங்களை வழங்குவதன் வழி
இந்தியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
தோட்டத் துறைகளில் பணியாற்ற
வங்காளதேசம், நேப்பாளம், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்கு
பதிலாக அரசாங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்தால் கடந்த காலங்களை போல இந்தியர்கள்
தோட்டத் துறைகளில் தங்களது பங்களிப்பை நிச்சயம் வழங்குவர் என்று கோத்தா கெமுனிங்
சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment