Friday, 19 July 2019

ஆவணப் பிரச்சினைகள்; ‘மைசெல்’ வழி 94 புகார்களுக்கு தீர்வு- கணபதிராவ்

ரா.தங்கமணி


ஷா ஆலம்-
நாடற்ற பிரஜைகள் உட்பட பல்வேறு அடையாள ஆவணப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட ‘மைசெல்’ பிரிவின் கீழ் இதுவரை 94 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
கடந்த 2018 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ‘மைசெல்’ பிரிவின் கீழ் இதுவரை 1,686 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 457 விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதில் மலாய்க்காரர்களின் 97 விண்ணப்பங்களும், சீனர்களின் 81 விண்ணப்பங்களும், இந்தியர்களின் 279 விண்ணப்பங்களும் அடங்கும். இதில் குடியுரிமை (101), பிள்ளை தத்தெடுப்பு (66), சிவப்பு அடையாள அட்டை (115), நீல அடையாள அட்டை ( 15), பிறப்புப் பத்திரம்  (116), குடிநுழைவு (28), அடையாள அட்டை (16) ஆகிய விண்ணப்பங்கள்  கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் குடியுரிமை (26), பிள்ளை தத்தெடுப்பு (7), சிவப்பு அடையாள அட்டை (16), நீல அடையாள அட்டை (15), பிறப்புப் பத்திரம்  (33), குடிநுழைவு (7), அடையாள அட்டை (1) ஆகிய விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

‘பரிவுமிக்க அரசாங்கம்’ எனும் கோட்பாட்டின் கீழ் ‘மைசெல்’ திட்டம் தொடங்கப்பட்டு ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

ஆனால்,  முறையாக பதிவு பெறாத திருமணங்களாலேயே பெரும்பாலானோர் ஆவணப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அதில் பலர் அந்நிய நாட்டவர்களை திருமணம் செய்வதாலும் திருமணத்தை முறையாக பதிவு செய்யாததாலுமே இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

‘மைசெல்’ பிரிவின் கீழ் தற்போது இரு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அதே வேளையில் உள்துறை அமைச்சு, தேசிய பதிவு இலாகா போன்றவை சிறந்த ஒத்துழைப்பை வழங்கி விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலிக்கின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கு நன்றி கூறி கொள்வதாக கணபதிராவ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment