Thursday, 11 July 2019

மலேசியர்களை ஒருங்கிணைத்த ‘மகாதீரிசம்’; அரசியல் சாணக்கியருக்கு வயது 94 #HBDTUNM


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அரசியல் என்றாலே சாக்கடைதான். அந்த சாக்கடையில நான் இறங்க விரும்பல’ என்பதே பலரின் கருத்தாகவும் எண்ணமாகவும் இன்றளவும் பிரதிபலிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் கட்டமைப்பு அரசியல் என்பதே அதிகார மையமாகும். அரசியலில் கடைந்தெடுத்த தலைவர்களே நாட்டை ஆளும் வர்க்கமாக தங்களை நிலைபடுத்திக் கொள்கின்றனர்.

அவ்வகையில் மலேசிய அரசியல் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்து மாபெரும் தலைவராக திகழ்பவர் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது. மலேசியாவில் 4ஆவது பிரதமராக பதவியேற்று 22 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவரை மீண்டும் அரசியல் வளையத்துக்குள் இழுத்து விட்டது மலேசியாவின் அரசியல் போக்கு.

டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக பதவி முந்தைய அரசின் தலைமைத்துவத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அந்த ஊழல் நடவடிக்கை மலேசியாவின் பொருளாதாரத்தை வலுவிழக்கவும் நாடு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி நாட்டின் அரசியல் புரட்சிக்கு வித்திட்டார்.

தனது வயது மூப்பை காரணம் காட்டி எந்த  தலைமைத்துவ பதவியிலிருந்து ஓய்வு பெற்றாரோ மீண்டும் 93 வயதில் அவரை அந்த பதவியில் அமர்த்தியது காலத்தின் கட்டாயமாகும்.

60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை கவிழச் செய்து அதுவும் 4ஆவது பிரதமராக  தான் தலைமையேற்றிருந்த தேசிய முன்னணியின் ஆட்சி அதிகாரத்திற்கு முடிவு கட்டி எதிர்க்கட்சிகளாக இருந்த கட்சிகளுடன் தனது புதிய கட்சியான பெர்சத்துவை இணைத்துக் கொண்டு 14ஆவது பொதுத் தேர்தலை சந்தித்தார். அதில் வெற்றியும் கண்டார்.
‘அரசியல் மாற்றம்’ எனும் புரட்சியை மலேசியர்களிடையே விதைத்து  அதில் வெற்றியும் கண்டு நாட்டின் 7ஆவது பிரதமராக தனது 93ஆவது வயதில் மீண்டும் அரியாசனம் அமர்ந்தார்.

ஊழல் எனும் சாக்கடையில் நாடு சீரழிந்துக் கொண்டிருப்பதை கண்டு வேடிக்கை பார்க்காமல் அதனை சுத்தம் செய்ய களம் கண்ட அரசியல் சாணக்கியர் துன் மகாதீருக்கு அப்போது வயது 90க்கு மேல்.

நாட்டின் சிறந்த வளர்ச்சிக்கு பங்காற்ற வயது ஒரு தடை இல்லை என்பதை தனது 93 வயதில்  நிரூபித்துக் காட்டிய துன் மகாதீர், சாதனை புரிவதற்கும் தலைமையேற்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதை மலேசியர்கள் மட்டுமின்றி உலகிற்கே எடுத்துரைத்தார்.

இன்று தனது 94 வயதை எட்டிய போதிலும் இன்றும் துன் மகாதீர்  ஓர் இளைஞரே. நாட்டின் வளர்ச்சிக்கு முதுமையிலும் ஓய்வின்றி உழைக்கும் துன் மகாதீருக்கு இந்நாட்டின் குடிமக்களாய் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.
#HBDTUNM

No comments:

Post a Comment