ரா.தங்கமணி
ஷா ஆலம்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்ட 25 வாக்குறுதிகளை நினைவேற்றுவதில் பக்காத்தான் ஹராப்பான் அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பு வலியுறுத்தியது.
கல்வி, சமூகம், பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 25 வாக்குறுதிகள் இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்டன.
ஆனால் ஆட்சியமைத்து ஓராண்டை கடந்து விட்ட நிலையில் இந்த 25 வாக்குறுதிகள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு பெரும் கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் தலைவர் சுப்பிரமணியம், தேசிய செயலாளர் ஆனந்த், ஆலோசகர் ராயுடு ஆகியோர் தெரிவித்தனர்.
இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும்.
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தாமல் அத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.
வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அவை புனித நூல் அல்ல என்று காரணம் சொன்னாலும் வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
2008ஆம் ஆண்டு முதல் பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவளித்து வரும் மலேசிய இந்தியர் குரல் இயக்கம், இந்த 25 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது தொடர்பில் வெகு விரைவில் பிரதமர் துன் மகாதீரை சந்திக்கவிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றம் காண்பதற்கு மலேசிய இந்தியர் குரல் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் துணைத் தலைவர் யோகராஜா, இதர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment