Friday, 3 May 2019

எஸ்டிபிஎம் vs மெட்ரிக்குலேஷன்; பல்கலைக்கழகத்தில் நுழைய இரு நடைமுறைகள் ஏன்?- கணபதிராவ் கேள்வி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

எஸ்பிஎம் தேர்வுக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு எஸ்டிபிஎம், மெட்ரிக்குலேஷன் என மாணவர்களுக்கு இருவகையான நடைமுறைகள் விதிக்கப்படுவது கல்வித்துறை மீதான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் இந்திய மாணவர்களுக்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட 2,200 இடங்களை தற்போது கல்வி அமைச்சு வெகுவாக குறைத்ததற்கு இந்திய சமுதாயம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. அந்த எதிர்ப்பின் எதிரொலியாக 25,000ஆக இருந்த மெட்ரிக்குலேஷன் இடங்கள் 40,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மெட்ரிக்குலேஷன் இட ஒதுக்கீட்டில் 90/10 என்ற அடிப்படையில் பூமிபுத்ராவினருக்கு 90 விழுக்காடும் பூமிபுத்ரா அல்லாதோருக்கு 10 விழுக்காடும் வழங்கப்படுவது  ஏற்புடையது அல்ல.

அதேபோன்று இப்போது மெட்ரிக்குலேஷன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால் எஸ்டிபிஎம் பயிலக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு காண்பதோடு தற்போதைய எஸ்டிபிஎம் மாணவர்கள் பல்கலைக்கழகம் பயில்வதற்கான நெருக்கடியும் ஏற்படக்கூடும்.

18 மாதங்கள் கஷ்டப்பட்டு பயிலக்கூடிய எஸ்டிபிஎம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு இட நெருக்கடியை எதிர்நோக்குவதோடு இதனால் தர்மசங்கடமான நிலை கூட ஏற்படலாம்.

பொது பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு எஸ்டிபிம், மெட்ரிக்குலேஷன் என இருவகையான கல்வி முறை நடைமுறைப்படுத்துவது கல்வி துறை மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில்  கேள்விக்குறியாக்கி விடும் என்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பின்போது கணபதிராவ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment