Sunday, 5 May 2019

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கேசவன் தோல்வி- மணிமாறன் குற்றச்சாட்டு

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக எஸ்.கேசவன் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டை கடக்கின்ற நிலையில் இன்னமும் இத்தொகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டார் என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் குற்றம் சாட்டினார்.

இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் தந்தி துறை (தொலை தொடர்பு) அமைச்சராக பதவி வகித்தனர். அவர்கள் முயற்சியில் சுங்கை சிப்புட் நகரம் தொலைதொடர்பு போக்குவரத்து ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டு வந்தது. இங்குள்ள மக்களின் வசதிக்காக டெலிகோல் மலேசியா அலுவலகமும், 4 முறை மின்சார ரயில் சேவையையும் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கேசவன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் டெலிகோம் மலேசியாவின் அலுவலகம் மூடப்பட்டது, 4 முறையாக இருந்த ரயில் சேவை ஒரு பயணமாக குறைக்கப்பட்டது.

முன்பு இங்கிருந்து கோலாலம்பூர், பினாங்கு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல பேருந்து வசதி இருந்தது. ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து கேசவனிடம் முறையாக மகஜர் கொடுத்தும் இன்றுவரையிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதியில் ஆவி வாக்காளர் பிரச்சினைக்காக மாநில தேர்தல் ஆணையம் அலுவலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஆனால் தொலைபேசி கட்டணம் செலுத்துவதற்கும் ரயில் சேவைக்கும் ஈப்போவுக்கும் கோலாகங்சாருக்கும் அலைய வேண்டிய நிலை  ஏற்படுகிறது. இங்குள்ள மக்களின் பிரச்சினைக்காக எத்தகைய ஆக்ககரமான நடவடிக்கையும் எடுக்காத கேசவனின் சாதனை இந்த ஓராண்டில் பூஜியமாகவே உள்ளது.

ஒரு நகரத்தின் வளர்ச்சியில் போக்குவரத்தும் தொலை தொடர்பு வசதியும் அவசியமானது. இவை இரண்டுமே இல்லாத சுங்கை சிப்புட் நகரம் வளர்ச்சியிலிருந்து பின் தள்ளப்பட்டு இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து கேசவன் செயலாற்ற வேண்டும் என மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment