Friday 17 May 2019

மக்கள் நலத் திட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி நடைபெறும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுத்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. சில திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. சில திட்டங்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில ஆட்சியை கைப்பற்றிய அப்போதைய மக்கள் கூட்டணி (இன்று நம்பிக்கைக் கூட்டணி)அரசின் கீழ் பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்தன.
அப்போது எதிர்க்கட்சியாக திகழ்ந்தபோதிலும் பிற மாநில அரசுக்கும் மத்திய  அரசுக்கும் முன்னோடியாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளங்கும் வகையில் மக்களுக்கான நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அமலில் 19; ஆய்வில் 14

அந்த திட்டங்களில் தற்போது 19 திட்டங்கள் நடைமுறையில் உள்ளது என்றும் 14 திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.

இலவச பேருந்து, சிலாங்கூர் மனை திட்டம், வாடகை மூலம் சொந்த வீட்டை பெறும் திட்டம், தோட்டப்புற மாணவர்களுக்கான திட்டம், ஹிஜ்ரா கடனுதவி, வர்த்தகளுக்கான மைக்ரோ கடனுதவி திட்டம், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை, ஏழ்மையில் உள்ளவர்களுக்கு வியாபாரப் பொருட்கள் வழங்கும் திட்டம் உட்பட 19  திட்டங்கள் இன்னும் அமலில் உள்ளன.

அதே போன்று இலவச குடிநீர், கிஸ் திட்டம், மருத்துவ அட்டை திட்டம், முதியோர் உதவி நலத் திட்டம் போன்ற 14 மக்கள் நலத் திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட  திட்டங்களில் மறு ஆய்வுக்கு உட்படுத்து இயல்பான ஒன்றுதான். அப்போதுதான் அதன் அடைவு நிலை, சாதக, பாதகமான விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

முதியோர் உதவி நலத் திட்டம் (Skim Mesra Usia Emas)
சிலாங்கூர்வாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மரண சகாய உதவி நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக மக்கள் மத்தியில் பல்வேறு அதிருப்தி அலைகள் எழுந்து வருவதை நான் அறிவேன்.

ஆனால் அது மரண சகாய உதவி நிதி என்பதை விட முதியோருக்கான உதவி நலத் திட்டம் 
என்பதே சரியானதாகும். இதற்கு முன்பு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு 2,500 வெள்ளி கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தங்களின் மரணத்திற்கு பின்னர் செய்யும் உதவியை  நாங்கள் அனுபவிக்க முடியாது என்ற முதியோர் பலர் மந்திரி பெசாரிடம் கோரிக்கை விடுத்ததன் வாயிலாக மரண சகாய நிதி Jom Shopping Raya திட்டமாக மாற்றம் கண்டுள்ளது.

இதன்வழி SMUE- திட்டத்தில் பதிந்துள்ள முதியோருக்கு அவரவர் பெருநாள் காலங்களின்போது 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும். அதனை அவர்கள் தங்களின் தேவைகேற்ற பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இருந்தபோதிலும் இத்திட்டம் குறித்து மக்களின் கருத்துகள் ஆராயப்படும் எனவும் இத்திட்டம் மக்களின் நலத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் கணபதிராவ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment