ஈப்போ-
பல ஆண்டுகளாக புறம்போக்குவாசிகளாக வாழ்ந்து வந்த புந்தோங் இந்தியர்களுக்கு பெம்பானில் வழங்கப்பட்ட வீட்டுடைமை நிலத்தை வழங்க மறுக்கும் மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் செயல் நடவடிக்கை ஒரு துரோகச் செயலாக அமைந்துள்ளது என்று புந்தோங் சமூகநல இயக்கத் தலைவர் செல்வகணேசன் சாடினார்.
பெம்பான் வீட்டுடைமை திட்டத்தில் முதல் கட்டமாக 133 நிலம் வழங்க முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் அனைத்து அடிப்படை வேலைகளையும் முடித்து விட்ட நிலையில் இன்னமும் பிரிமியம், அதற்கான வரி கட்டணம் ஆகியவற்றை செலுத்தினாலே போதுமானது.
வெ.2,000க்குள் அடங்கக்கூடிய வேலையை இன்னும் தாமதப்படுத்தி தற்போது பெம்பான் பகுதியில் இந்த 133 பேருக்கும் நிலம் வழங்க முடியாது, புந்தோங்கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அதில் வீட்டை தருகிறோம் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கூறுவது அவர்களுக்கு வாக்களித்த புந்தோங் வாழ் இந்தியர்களுக்கு செய்யும் துரோகச் செயலாகும்.
பெம்பான் நில வீட்டுடைமை திட்டத்தில் மொத்தம் 846 லோட் கொடுக்கப்பட வேண்டியது ஆகும். இதில் புந்தோங்கைச் சேர்ந்த 587 பேருக்கு வழங்க வேண்டியது ஆகும்.
587 பேரில் வீடு கட்ட தகுதி வாய்ந்த 133 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் 133 பேரில் பலர் வெளிமாநிலங்களில் உள்ளனர் என குற்றஞ்சாட்டும் 'மாண்புமிகுகள்' 133 பேரையும் அழைத்து நேர்காணல் செய்து அவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு நிலம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக நில திட்டத்தையே ரத்து செய்வது முட்டாள்தனமாகும்.
இதே சிவசுப்பிரமணியம் முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது புந்தோங்கில் வாழும் புறம்போக்குவாசிகளுக்கு நிலம் வழங்க வேண்டும் என குரலெழுப்பி விட்டு இன்று ஆட்சி அதிகாரம் அவர்கள் வசமானபோது நில திட்டத்தை ரத்து செய்வது இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
புந்தோங் மக்களுக்கு நல்லது செய்வார் என சிவசுப்பிரமணியத்தை நம்பி வாக்களித்த மக்களுக்கு இன்று மிகப் பெரிய ஆப்பு வைத்துள்ளதில் அவரின் சாயம் வெளுத்து விட்டது. இவ்விவகாரத்தில் பச்சோந்தி போல சிவசுப்பிரமணியம் நடந்து கொள்ளக்கூடாது.
தேமு ஆட்சியில் பெம்பானில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து நிலத்தை மூன்றாம் தரப்பு கைமாற்றி விடக்கூடாது என்பதை சிவசுப்பிரமணியம் உணர வேண்டும் என்று செல்வகணேசன் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment