Friday, 15 February 2019

133 இந்தியர்களுக்கு துரோகம் இழைக்கிறதா பக்காத்தான் ஹராப்பான்?

ரா.தங்கமணி

ஈப்போ-
புந்தோங்கில் வீடற்றவர்களாக வாழும் 133 இந்தியக் குடும்பங்ளுக்கு பத்துகாஜா, பெம்பானில் வழங்கப்பட்ட வீட்டுமனை நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்படாது என்று பேரா மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் கூறியுள்ளது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாக கருதப்படுகிறது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது இந்த 133 இந்தியக் குடும்பங்களுக்கும் நில ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்நிலத்தை சீர்படுத்துவதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 5 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்தார்.

நிலம் சீரமைக்கப்பட்ட 133 இந்தியக் குடும்பங்களுக்கும் நிலம் வழங்குவதற்காக ஒப்புதல் கடிதம் கடந்த தேமு ஆட்சியின்போதே வழங்கப்ப்பட்ட நிலையில் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது மாநில ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தற்போது இந்நிலத்தை இந்தியர்களுக்கு வழங்க முடியாது என கூறுவது அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே கருதப்படுகிறது.

இந்தியர்கள் வழங்கிய முழுமையாக ஆதரவினாலேயே இன்று மாநில ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கொண்டிருக்கின்ற நிலையில் இப்போது இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அபகரிக்க முயற்சிப்பது பக்காத்தான் ஹராப்பானுக்கே ஆபத்தாக முடியலாம்.

புந்தோங் சட்டமன்ற உறுப்பினராகவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்தியர்களே பதவி வகிக்கின்ற நிலையில் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகத்திற்கு உடந்தையாக செயல்படுகின்றனரா? என்ற கேள்வி எழுகிறது.

முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்தியர்கள் சார்ந்த ஒரு பிரச்சினை
என்றால் பொங்கி கொண்டு அறிக்கை மேல் அறிக்கை விடும் இரு மக்கள் பிரதிநிதிகளும் தற்போது 133 இந்தியக் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் துரோகத்திற்கு எதிராக வாயை திறக்காமல் மெளனம் காப்பது ஆளும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

No comments:

Post a Comment