தைப்பூசத்தன்று இறைவனை நோக்கி ஒவ்வொரு அடியாக முன்னே வைக்கும் போது நம் உள்ளம் தூய்மையாகின்றது. அதேவேளையில் அந்த ஒவ்வொரு அடிக்குப் பின்னால் சிதறிக்கிடக்கும் குப்பைக் கூளங்கள் நம்மையும் நம் செயல்பாடுகளையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கிவிடுகிறதே என்ற கவலையும் பக்தியின் பக்கத்தில் கரும்புள்ளியாய் தொற்றிக்கொள்கிறது.
பக்தர்களும், சுற்றுப் பயணிகளும் அதிகமாக ஒன்று கூடும் இந்தப் புனிதத் தளத்தில் நம்மால் தூய்மையான தைப்பூசத்தைக் கொண்டாட முடியும் என்கின்றனர் விரைவில் திரையரங்கில் நம்மைக் காண வரும் ' பூச்சாண்டி' படக் குழுவினர்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமாக பரவிக்கொண்டிருக்கும் 'கசக்கு நசுக்கு' எனும் 3 நிமிடங்கள் அடங்கிய விழிப்புணர்வு காணொளி, இந்த மலேசிய தமிழ் திரைப்படக் குழுவினரின் கூட்டு முயற்சியாகும். குப்பை மற்றும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் விளைவுகளையும் அதனை களைவதற்கான சில எளிய வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் காணொளியாகவே இது உள்ளது. அகன்ற பார்வையும், கூர்ந்த சிந்தனையும் ஆழ்ந்த செயல்பாடும் முருகனின் வேலை பிரதிபலிக்கின்றது. அவனை நோக்கி செல்லும் நமது செயல்பாடுகளும் அதுவாகவே இருக்க வேண்டும். நம்முடைய செயலே நாம் யார் என்பதை காட்டுகிறது.
தூய்மை பற்றிய தெளிவு நமக்கு அதிகமாகவே இருக்கின்றது, ஆனால் சில சமயங்களில் அதை செயல்படுத்தும்போது பல காரணங்களை முன்னிறுத்தி கடமையிலிருந்து தவறுகிறோம் என்பது உண்மையே.
பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது கடைப்பிடிக்கக்கூடிய எளிய தீர்வுகளை இயக்குனர் JK விக்கி அவர்களின் விழிப்புணர்வு வீடியோ எடுத்துரைக்கின்றது.
அது சேதத்தை குறைக்க உதவுகிறது. நெகிழிப் பைகளைத் தவிர்ப்பது, இயற்கையாக மக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது, குப்பை தொட்டிகளை சரியாக பயன்படுத்துவது, குப்பைத் தொட்டிகள் இல்லாத இடத்தில் அதற்கான மாற்று வழிகள் யாவை போன்ற பல யுக்திகளை இந்த வீடியோ உள்ளடக்கியுள்ளது.
மலேசிய நடிகர் லோகன், வானவில் சூப்பர் ஸ்டார் புகழ் கணேசன் மனோகரன், ஜகாட் திரைப்படத்தின் மெக்ஸிகோ கதாபாத்திர புகழ் தினேஷ் சாரதி கிருஷ்ணன், புதுமுக நடிகை ஹம்சினி பெருமாள் ஆகியோர் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். இதனை முகநூலில் Poochandi எனும் பெயரில் இருக்கும் பக்கத்தில் காணலாம்.
மேலும் YouTube - இல் https://www.youtube.com/watch?v=cLcKxJE7WIc இந்த இணைப்பில் ‘Kasakku, Nasukku - Alarming sign of ignorance at Thaipusam. Let's keep our Temples clean’ என்ற பெயரில் இந்தக் காணொளியைக் காணலாம்.
சிக்கலுக்கு தீர்வாக இருப்போம், சிக்கலாக அல்ல!
No comments:
Post a Comment