கோலாலம்பூர்-
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக உள்ள மஇகாவை மட்டம் தட்டியே தன்னை பலம் வாய்ந்த கட்சியாக காட்டிக் கொள்ள முயலும் அம்னோ, எவ்வளவு பட்டாலும் திருந்தாது என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் கருத்து தெரிவித்தார்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் 26ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ம இகா போட்டியிட்டு வந்த அத்தொகுதியை தற்போது அம்னோ கோரியுள்ளது.
மஇகா மத்திய செயற்குழு அத்தொகுதியை அம்னோவுக்கு விட்டுத் தர ஆதரவு வழங்கியிருந்தாலும் அத்தகைய முடிவை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கவில்லை.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தை இழப்பதற்கு அம்னோவின் தவறுகளும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளுமே காரணம். ஜெயித்து விடுவோம்; ஆட்சியை கைப்பற்றுவோம் என சொல்லியும் ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்டோம்.
இப்போது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் அதே குருட்டு நம்பிக்கையை கொண்டுள்ளனர். ம இகாவினால் ஜெயிக்க முடியாது என மட்டம் தட்டும் அம்னோவினர், அங்கு போட்டியிட்டால் தான் வெற்றியா,
தோல்வியா? என்பது தெரிய வரும்.
அப்படியே இந்த தேர்தலில் தோல்வி கண்டாலும் இழக்க என்ன உள்ளது, ஆட்சி தான் மாறிவிடப் போகிறதா? அதிகாரம் தான் திரும்ப கிடைத்து விடப்போகிறதா? மஇகாவை மட்டம் தட்டியே பல தொகுதிகளை அம்னோ கைப்பற்றிக் கொண்டது. எடுத்துக் கொண்டதை அவர்களே வைத்துக் கொண்டுள்ளனர்.
மஇகாவை மட்டம் தட்டுவதை காட்டிலுக் அம்னோவிலிருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தக்கவைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். மஇகாவில் இருந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அணி மாறவில்லை. ஆனால் அம்னோவினர் தான் அணி மாறுகின்றனர்.
இப்போது கேமரன் மலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அந்த பிரதிநிதி நிச்சயம் அணி மாறக்கூடும். இந்த விஷயத்தில் அம்னோ எவ்வளவு பட்டாலும் திருந்தாது என்று டத்தோ மோகன் கூறினார்.
No comments:
Post a Comment