கோலாலம்பூர்-
ஊழல் வழக்கில் தொடர்புபடுத்தப்படாததால் மஇகா உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கலாம் என்று கிளாந்தான் மலேசிய பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் டத்தோ டாக்டர் அப்துல் ஹலிம் சிடேக் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறியதாக மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டதால் அவரது வெற்றி நிராகரிக்கப்பட்டது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ் ஆகியவற்றில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படாததால் இந்த இடைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு சிவராஜுக்கு எவ்வித தடையும் இல்லை.
நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ சிவராஜின் வெற்றி எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பூர்வக்குடியினத் தலைவர்களுக்கு பணம் வழங்கியது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவரது வெற்றி செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் சிறப்பு தேர்தல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மஇகா மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்த நிலையில் 14 நாட்களுக்கு பின்னர் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தெதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment