Thursday, 20 December 2018

செனட்டராக பதவியேற்றார் சுரேஷ் சிங்

கோலாலம்பூர்-
தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங்கிடம் செயலாளராக பணியாற்றி வந்த சுரேஷ் சிங் இன்று காலை மேலவை உறுப்பினராக (செனட்டர்) பதவியேற்றுக் கொண்டார்.
இன்றுக் காலை மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் அவர் பதவியேற்றார்.

இவர் தொழிற்சங்க போராட்டவாதியான டாக்டர் வி.டேவிட்டுடன் இணைந்து பணியாற்றிய ராஷ்பால் சிங்கின் மகனாவார்.  1990ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுரேஷ் சிங், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கோபிந்த் சிங்கின் செயலாளராக பணியாற்றினார்.

தனக்கு கிடைக்கப்பெற்றுள்ள செனட்டர் பதவியின்  மூலம் பூச்சோங் வட்டார மக்களுக்கு அமைச்சர் கோபிந்த் சிங்குடன் இணைந்து சிறப்பாக சேவையாற்றுவதாகவும் எவ்வித பாரபட்சமுமின்றி தனது சேவை அமைந்திருக்கும் என்றும் சுரேஷ் சிங் கூறினார்.

மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவம், சமூக நல உதவிகள் குறித்து அடுத்த மேலவை கூட்டத்தில் பேசவிருப்பதாக கூறிய அவர், தந்தையின் மறைவுக்கு பின்னர் ஆதரவும் ஊக்கமும் தந்த தாயார் திருமதி ராஜலெட்சுமி, அமைச்சர் கோபிந்த் சிங் உட்பட பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கும் நன்றி கூறி கொள்வதாக அவர் சொன்னார்.
இதனிடையே, கோத்தா அங்கிரிக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான யாக்கோப் சப்ரியும் மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment