கோலாலம்பூர்-
விரைவில் இடைத் தேர்தலை சந்திக்கவுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக முன்னாள் துணை அமைச்சர் டத்தோ தோ.முருகையா களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் புதிய வேட்பாளரை களமிறக்க மஇகா முனைகிறது.
மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான இங்கு மஇகா வேட்பாளரே களமிறக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அங்கு போட்டியிட தகுதி வாய்ந்த வேட்பாளராக டத்தோ முருகையாவுக்கே வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.
முன்னாள் துணை அமைச்சராக பதவி வகித்த அனுபவமும் மஇகாவின் உதவித் தலைவராக பதவி வகிப்பதும் அவருக்கு இந்த இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதற்கான சூழல் அதிகமாக உள்ளது.
இன்னும் ஓரிரு தினங்களில் கேமரன் மலைக்கான தேமு வேட்பாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்பதும் டத்தோ முருகையாவை தவிர்த்து வேறு வேட்பாளர் யாராவது களமிறக்கப்படுகிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment