Wednesday, 19 December 2018

இன விவகாரங்கள் 'நெறி'படுத்த வேண்டும்; 'வெறி'யேற்றக்கூடாது - மணிமாறன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இனங்களுக்கிடையிலான விவகாரங்களை கையாளும் முறை நெறிபடுத்த வேண்டுமே தவிர அதில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய 'வெறி' தூண்டப்படக்கூடாது என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

இங்கு பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் வாழ்கின்றனர்.  அனைத்துத் தரப்பினரின் சமய விவகாரங்களும் மிக கவனமான முறையில் கையாளப்பட வேண்டும்.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் சுமூகமான முறையில் தீர்வு காணும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் இன்று தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப்பை இழந்திருக்க மாட்டோம்.

சமயம் என்பது ஒரு மனிதனை நெறிபடுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். அதுவே  ஒருவருக்கும் வெறி ஏற்றும் கருவியாக மாறிவிடக்கூடாது.
சமயம் சார்ந்த விவகாரங்களை முறையாக கையாள்வதற்கு ஏதுவாக சிறப்பு பணிக்குழு அமைப்பதில் நடப்பு அரசாங்கம் தீவிரம் காட்ட வேண்டும். சீபில்ட் ஆலயம் மட்டுமே பிரச்சினைக்குரிய ஆலயம் அல்ல. அதையும் தாண்டி பல ஆலயங்கள் இன்னமும் நிலப் பிரச்சினையும் தலைமைத்துவப் பிரச்சினையும் எதிர்நோக்கியுள்ளன.

அப்பிரச்சினைகளை முறையாக களைவதற்கு ஏதுவாக சிறப்பு பணிக்குழு அமைப்பது ஏற்புடையதாகும். அப்போதுதான் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்று மணிமாறன் கூறினார்.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது கடுமையான தாக்குதலுக்கு ஆளான தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் தீவிர சிகிச்சை பெற்று வந்த போதிலும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முகமட் அடிப்பின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு இச்சம்வபத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment