எட்டு ஆண்டுகால மாணவர் முழக்கம் போட்டிக்
களத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இந்த ஆண்டில் அனைத்துலக நிலைப் போட்டிக்குத் தகுதி
பெற்றுள்ள பேரா மாநிலத்தைச் சேர்ந்த மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, மலேசியாவே மகிழும் பூவாக வெற்றியோடு திரும்ப வேண்டும்
என்று பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் புகழாரம் சூட்டி
வாழ்த்தினார்.
வரும் டிசம்பர் 1ஆம் தேதி அனைத்துலக மாணவர்
முழக்கம் போட்டி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக
மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவி கிவேசா சுந்தர் தேர்வாகியுள்ளார். அந்தச் சாதனை
மாணவிக்காக நடத்தப்பட்ட சிறப்பு வழியனுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
சிறப்புரையாற்றும் பொழுது சுப.சற்குணன் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டியில் மலேசியாவைப்
பிரதிநிதித்து மூன்று மாணவர்கள் செல்லவிருக்கின்றனர். அவர்களில் இருவர் பேரா
மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மிகவும் பெருமையாக உள்ளது என்றாரவர். பேராவைச்
சேர்ந்த கேப்பிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் கமல்ராஜ் குணாலனும் இந்த அனைத்துலகப்
போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின்
அதிரடியான வெற்றி இப்பொழுது சிங்கப்பூரிலும் தொடரும் என சுப.சற்குணன் நம்பிக்கை
தெரிவித்தார்.
முன்னதாகப் பேசிய பள்ளியில்
தலைமையாசிரியர் திருமதி மாரியம்மா மாணவி
கிவேசாவின் வெற்றிப் பயணம் குறித்து தமதுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
பொறுப்பாசிரியர் திருமதி தமிழரசி மற்றும்
தமிழ்மொழி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியும் உழைப்பும் இந்த வெற்றிக்குக் காரணமாக
அமைந்தது. எட்டு ஆண்டுகள் தொடர்ந்து மாணவர் முழக்கம் போட்டியில் கலந்து வரும் எங்கள்
பள்ளிக்கு இந்த முறை மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று பெருமிதத்தோடு
கூறினார்.
ஆசிரியை திருமதி லோகேஸ்வரியின்
அழகுதமிழ் அறிவிப்போடு நடந்த இந்த வழியனுப்பி நிகழ்ச்சியில் பேரா மாநிலக் கல்வித்
திணைக்களத்தின் தமிழ்மொழி உதவி இயக்குனர் சந்திரசேகரன், வாரியத் தலைவர் புண்ணியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இராமராஜ், காவல் துறை அதிகாரி சார்ஜன் ஜர்ஜிட் சிங் ஆகியோருடன் பள்ளி
ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment