Monday, 19 November 2018

தமிழ்மொழியை அடுத்தத் தலைமுறைக்கும் கொண்டுச் செல்வோம்- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
செம்மொழியான தமிழ்மொழியை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் கட்டாயம் பங்குண்டு. முன்பு நடைமுறையில் இருந்த பல மொழிகள் இன்று வழக்கத்தில் இல்லாமல் காணாமல் போயுள்ளன. ஆனால பல்லாயிரம் ஆண்டுகள் முதுமொழியான தமிழ்மொழி இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

தமிழ்மொழியை பாதுகாக்க பல அறிஞர்கள் பாடுபட்டுள்ளனர். தமிழ் எங்கள் மூச்சு என்று சுவாசித்த பலரால்தான் இன்றும் தமிழ்மொழியை நாம் பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.

அந்த வகையில் தமிழுக்கு தொண்டாற்றியவர் மறைமலை அடிகளார். அன்றைய காலத்திலேயே தமிழுக்கு தொண்டாற்றும் வகையில் வேதாசலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகளார் என அவர் மாற்றிக் கொண்டுள்ளார். இவரை பற்றி நம்மில் பலர் அறிந்து வைத்திருக்க மாட்டோம்.

தமிழுக்கு தொண்டாற்றிய  பலரை நாம் அறிந்திருக்காததாலே அம்மொழியின் வலிமையை நாம் உணராமல் இருக்கிறோம்.

அவ்வகையில் 2015ஆம் ஆண்டு தொடங்கிய அறம் மலேசியா இயக்கம் ஒவ்வோர் ஆண்டும் தமிழுக்கு தொன்டாற்றிய அறிஞர்களுக்கு மாநாடு நடத்துவது சிறப்பானதாகும்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே தமிழ்மொழி எவ்வாறு ஒடுக்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் உணர முடியும். பல போராட்டங்களில் தமிழ்மொழியை காப்பாற்றி இன்று நம்மிடம் ஒப்படைக்கும் இம்மொழியை அடுத்தத் தலைமுறைக்கும் கொண்டுச் செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நம்மிடம் உள்ளது.

ஆகவே, நமது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு மாற்றத்திற்கு நாம் தான் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று இந்நிகழ்வில் சிறப்பாளராக கலந்துக் கொண்ட கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் அறம் மலேசியா இயக்கத்தின் தலைவர் வ.நடேசன் உரையாற்றுகையில், இவ்வியக்கம் தொடங்கிய காலம் முதலே தமிழ்மொழிக்கும் சமயத்திற்கும்  முக்கியத்துவம் வழங்கி வருகிறோம்.

தமிழ்மொழியை நாம் பரவலாக பயன்படுத்தத் தொடங்கினால் நிச்சயம் அதற்கான பலன் கிடைத்தே தீரும். தமிழ்மொழியை பயன்படுத்துவதனால் அதன் மூலம் வேலை வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் சொன்னார்.

அறம் மலேசியா இயக்கத்தின் துணைத் தலைவர் ராசேந்திரன், மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைவர் சுப்ரா, ஷா ஆலம் மாவட்ட மன்ற உறுப்பினர் யுவராஜா, ஷா ஆலம் தமிழ் சங்கம் சீரியநாதன், முன்னாள் தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக கிராமத் தலைவர்கள் அனைவரும் இந்தியர்கள் பாரம்பரிய உடையில் வருகை தந்தது நிகழ்ச்சிக்கு மெருகூட்டும் வகையில் அமைந்திருந்தது.

No comments:

Post a Comment