Saturday, 3 November 2018

சீபில்ட் ஆலய நில விவகாரத்தில் உண்மையை திரித்து கூற வேண்டாம்- கணபதி ராவ்


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
ஹைக்கோம் (சீபில்ட்) ஆலய விவகாரம் தொடர்பில் என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் தரப்பினர் பாடாங் ஜாவா ஆலயத்திற்கும் சீபில்ட் ஆலயத்திற்கு உள்ள வேறுபாட்டை உணர்ந்து பேச வேண்டும்  என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் வலியுறுத்தினார்.

சீபில்ட் ஆலய நில விவகாரம் மேம்பாட்டாளருக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கும் உள்ள பிரச்சினை ஆலயத்தில் உள்ள இரு தரப்பினரில் ஒருவர் மேம்பாட்டாளருக்கு நிலத்தை விட்டுக் கொடுக்க முன்வந்த போதிலும் மற்றொரு தரப்பினர் ஆலயத்திற்கு நிலத்தை விட்டுக் கொடுக்க மறுக்கின்றனர்.

ஏற்கெனவே மேம்பாட்டாளருக்கு நிலத்தை கொடுக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட நிலையில் செல்லாப்பாவே அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலே இந்த நிலத்தை மேம்பாட்டாளர் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சீபில்ட் ஆலயத்தை நான் தான் உடைக்கச் சொன்னேன் என்று தவறான தகவலை பரப்பும் தரப்பினர் பாடாங் ஜாவா மாரியம்மன் ஆலயம் உடைபட்ட சம்பவத்தை உண்மை நிலை அறியாமல்  இவ்விவகாரத்துடன் ஒப்பிடுகின்றனர்.

பாடாங் ஜாவா ஆலயம் உடைபட்ட சமயம் அந்நிலம் மாநில அரசுக்கு சொந்தமானதாக இருந்தது.  அதனை அப்போதைய மாநில அரசு (தேசிய முன்னணி) நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால், அதனை மாநில அரசு தடுக்காத நிலையிலே நான் உட்பட பலர் அதற்கு எதிராக போராடினோம்.

சீபில்ட் ஆலய விவகாரம் மேம்பாட்டாளருக்கும் ஆலய நிர்வாகத்தினருக்க்கும் உள்ள விவகாரம் ஆகும். இதனை சுமூகமாக தீர்க்கவே மாநில அரசு களமிறங்கியுள்ளது.

இந்த உண்மை நிலை அறியாமல் போராட்டம் நடத்துவதாக கூறி, தன் மீது பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று கணபதி ராவ் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment